பிறந்த குழந்தைக்கு ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால்தான் பிரதான உணவு. ஆறுமாதத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் திட உணவை கொடுக்க ஆரம்பிக்கலாம்ன்னு எல்லாருக்குமே தெரியும். மருத்துவர்களும் சொல்வாங்க. இட்லி, இடியாப்பம், வேக வச்ச ஆப்பிள், கஞ்சின்னு கொடுக்கலாம்ன்னு சொல்வாங்க. அதுக்குலாம் மெனக்கெடனுமேன்னு நாம செர்லாக், பீடியாஸ்யூர்ன்னு டின்னில் அடைக்கப்பட்ட உணவை கொடுப்போம். அதுலாம் சாப்பிட்டால்தான் குழந்தை ஆரோக்கியமாவும், கொழுகொழுன்னு இருக்கும்ன்னு நினைப்போம். ஆனா, அது உண்மையில்லை. நமது பாரம்பரிய உணவு வகைகளை கொஞ்சம் கொஞ்சமாய் கொடுக்க ஆரம்பிக்கலாம். அரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம்ன்னு நம்ம மண்ணில் விளையும் பொருட்களால் ஆன இட்லி, இடியாப்பம், கஞ்சி, புட்டுன்னு கொடுக்கலாம். பக்கவிளைவில்லாதது. எளிதாய் ஜீரணிக்கும். ஆரோக்கியமானதும்கூட…
இன்றைய பதிவில் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய கேழ்வரகிலான உணவினை பார்க்கலாம்!!
குழந்தைகளுக்கு கேழ்வரகில் பால் எடுத்து அதனுடன் கருப்பட்டி (பனை வெல்லம்) அல்லது பனங்கற்கண்டு சேர்த்து காய்த்து கொடுக்கலாம். குழந்தை நல்ல ஆரோக்கியத்துடனும் நல்ல உடல் வலிமையுடன் வளரும்.
இதன் செய்முறை
தானியமாக முழு கேப்பையை வாங்கி, பின்னர் நன்கு சுத்தம் செய்து நன்றாக கழுவி, காற்று புகாதவாறு ஒரு பாத்திரத்தில் மூடிவைத்து, அடுத்த நாள் ஊற வைத்த கேழ்வரகுடன் தண்ணீர் உடன் சேர்த்து நன்கு மை போல் அரைக்கனும். சுத்தமான துணியில் பாலை பிரித்தெடுக்கனும். அந்த கேழ்வரகு பாலுடன் கருப்பட்டியையும் சேர்த்து நல்லா காய்ச்சனும். இதை ஆறின பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆனா, கஞ்சி காய்ச்சி 3 மணிநேரத்திற்குபின் கொடுக்கனும்.
இப்படி இதை கொடுத்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாவும் கொழுகொழுன்னு வளரும். இதை குடித்தால் குழந்தைகளுக்கு தண்டுவடம் பலப்படும். ஆனா, சில குழந்தைகளுக்கு இயல்பிலேயே கேழ்வரகு உடல் ஒத்துக்கொள்ளாது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இந்த பால்கஞ்சியை கொடுக்க தவிர்க்கலாம்!