மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. குறிப்பாக, பணம், பிரியாணி போன்ற எந்தவித சலுகைகளும் இல்லாமல், லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டது, ஆளும் திமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மாநாடு, திராவிட கட்சிகள் பல ஆண்டுகளாக கடைப்பிடித்துவரும் கூட்டத்தை கூட்டும் முறைகளுக்கு ஒரு மாற்று வழியை உருவாக்கியுள்ளது.
ஸ்டாலினுக்கு நேரடி தாக்குதல்
மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரடியாக “அங்கிள்” என்று விளித்து பேசியது, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஸ்டாலின் அங்கிள் இது ரொம்ப தப்பு அங்கிள்” என்று கூறிய அவர், தமிழக அரசின் செயல்பாடுகளை நேரடியாக விமர்சித்தார்.திமுக அரசின் நிர்வாகம் மீது கடுமையான கேள்விகளை எழுப்பினார். இது, புதிய தலைமுறை அரசியல்வாதி, மூத்த அரசியல்வாதியை நேரடியாக விமர்சித்த ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
பாசிச பாஜக-வை வறுத்தெடுத்த விஜய்
விஜய்யின் உரையில், பாஜக மீதான விமர்சனம் வெளிப்படையாக இருந்தது. “பாசிச பாஜகவுடன் மறைமுக கூட்டுக்கு செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா?” என்று கேள்வி எழுப்பியதன் மூலம், பாஜகவின் அரசியலை அவர் கடுமையாகச் சாடினார். “தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது” என்று கூறி, பாஜக-வால் தமிழகத்தில் வேரூன்ற முடியாது என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தினார். இந்த விமர்சனம், தமிழ்நாட்டு அரசியலில் பாஜகவுக்கு எதிரான ஒரு புதிய குரலாக விஜய்யை நிறுத்தியுள்ளது.
அதிமுக தொண்டர்களுக்கு மறைமுக அழைப்பு
விஜய் தனது பேச்சில் அதிமுகவை ஒரு பொருட்டாகவே மதிக்காதது போன்ற பாணியை கடைப்பிடித்தாலும், அதன் தொண்டர்களுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்தது ஒரு ராஜதந்திர நகர்வாக கருதப்படுகிறது. “எம்.ஜி.ஆர் கட்சியை இப்போது எப்படி உள்ளது என்பதை வெளியில் சொல்ல முடியாமல் அப்பாவி அதிமுக தொண்டர்கள் தவிர்க்கிறார்கள்” என்றும், “2026-ல் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பது அந்த அப்பழுக்கற்ற அதிமுக தொண்டர்களுக்கு தெரியும்” என்றும் அவர் கூறியதன் மூலம், அதிமுகவின் தற்போதைய தலைமை மீது அதிருப்தியில் உள்ள தொண்டர்களை தனது பக்கம் ஈர்க்க அவர் முயன்றுள்ளார்.
ஆட்சியில் பங்கு: கூட்டணிக்கு அழைப்பு
“நான் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை, படைக்கலனுடன் வந்துள்ளேன்” என்று கூறிய விஜய், “ஒரே கொள்கை எதிரி பாஜக, ஒரே அரசியல் எதிரி திமுக” என்றும் குறிப்பிட்டார். ஆனால், “கூட்டணி வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றும் கட்சி நமது தவெக அல்ல” என்று கூறி, கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிடும் முடிவை அவர் தெளிவுபடுத்தினார். அதே நேரத்தில், “நம்பி வருபவர்களுக்கு அரசியல், அதிகாரம் பங்களிக்கப்படும்” என்று கூறி, தனது தலைமையின் கீழ் வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கிடைக்கும் என்ற மறைமுக அழைப்பையும் விடுத்தார்.
“சிங்கம் வேட்டைக்குதான் வரும்”: விமர்சனங்களுக்கு பதிலடி
“விஜய் அரசியலுக்கு வரமாட்டார், மாநாடு நடத்த மாட்டார்” என்று விமர்சித்தவர்களுக்கு, “கட்சி தொடங்க முடியாது என்றார்கள், தொடங்கிவிட்டோம்; மாநாடு நடத்த முடியாது என்றார்கள், நடத்திக் காட்டிவிட்டோம். அடுத்து ஆட்சியைப் பிடிக்க முடியாது என்கிறார்கள். ஆட்சியைப் பிடித்துக் காட்டட்டுமா?” என்று சவால் விடுத்தார். மேலும், “சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும், வேடிக்கை பார்க்க சிங்கம் வெளியே வராது” என்று கூறி, வொர்க் ப்ரம் அரசியல் என்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
ஒட்டுமொத்தமாக, இந்த மாநாடு தமிழ்நாட்டில் விஜய்யின் அரசியல் நுழைவை அழுத்தமாக பதிவு செய்துள்ளது. இது, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ஒரு புதிய போட்டியாளரை உருவாக்கியுள்ளதுடன், அடுத்தடுத்த தேர்தல்களில் திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்குக் கடுமையான சவாலை ஏற்படுத்தக்கூடும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
