நாம் ரஷ்ய எண்ணெய்யை அதிகம் வாங்கும் நாடு அல்ல. அந்த பெருமை சீனாவுக்குத்தான். ரஷ்யாவின் LNG-யை அதிகம் வாங்குபவர்களும் நாம் அல்ல. அது ஐரோப்பிய ஒன்றியமாக இருக்கலாம் என நினைக்கிறேன். 2022-க்கு பிறகு ரஷ்யாவுடன் அதிக வர்த்தக வளர்ச்சி கொண்ட நாடும் நாம் இல்லை.
முக்கியமாக, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கர்கள், உலக எரிசக்தி சந்தையை நிலைநிறுத்த ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். அதோடு, அமெரிக்காவிடம் இருந்தும் நாம் எண்ணெய் வாங்குகிறோம், அந்த அளவு அதிகரித்தும் வருகிறது. எனவே, இந்த குற்றச்சாட்டுகளின் பின்னால் உள்ள தர்க்கம் எனக்கு புரியவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாஸ்கோவில் அளித்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
நமது சந்திப்பு, இந்தியா-ரஷ்யா இடையேயான இருதரப்பு உறவுகளை முழுமையாக மறுஆய்வு செய்ய உதவியது. இரண்டாம் உலக போருக்குப் பிறகு, உலகின் முக்கிய உறவுகளில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான உறவு மிகவும் நிலையான ஒன்றாகும் என்று நாங்கள் நம்புகிறோம். புவிசார் அரசியல் ஒருங்கிணைப்பு, தலைமைத்துவ தொடர்புகள் மற்றும் மக்கள் உணர்வுகள் ஆகியவை இந்த உறவின் முக்கிய உந்துசக்திகளாக உள்ளன.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில், இருநாடுகள் முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் லாவ்ரோவுடன் பேசினேன். துணை பிரதமர் டென்னிஸ் மன்தரோவுடன் இணைந்து இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். ரஷ்யாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், இருதரப்பு வர்த்தகத்தை சமநிலை மற்றும் நிலையான முறையில் விரிவுபடுத்த எங்கள் பொதுவான விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினோம். இதற்கு, சுங்க வரி அல்லாத தடைகளையும், ஒழுங்குமுறை தடைகளையும் விரைவாக நீக்க வேண்டும்.
மருந்து பொருட்கள், விவசாயம் மற்றும் ஜவுளி போன்ற துறைகளில் இந்திய ஏற்றுமதியை அதிகரிப்பது, தற்போதைய வர்த்தக ஏற்றத்தாழ்வை சரிசெய்ய உதவும். நீண்ட கால உர விநியோகத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் விவாதிக்கப்பட்டன. தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம் மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் இந்திய திறமை வாய்ந்த தொழிலாளர்கள் ரஷ்யாவின் தொழிலாளர் தேவைகளை நிவர்த்தி செய்து, ஒத்துழைப்பை ஆழப்படுத்த முடியும். வர்த்தகம் மற்றும் முதலீடுகள் மூலம் எரிசக்தி ஒத்துழைப்பை தக்கவைப்பது முக்கியமானது.
சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம், சென்னை-விளாடிவோஸ்டோக் கிழக்கு கடல் வழித்தடம் மற்றும் வடக்கு கடல் பாதையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட இணைப்பு முயற்சிகள் குறித்தும் நாங்கள் பேசினோம். இந்த வழித்தடங்கள் பொருளாதார தொடர்புகளை ஆழப்படுத்தவும், போக்குவரத்து நேரத்தை குறைக்கவும், யூரேசியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள வர்த்தக அணுகலை விரிவுபடுத்தவும் உதவும்.
எங்கள் பாதுகாப்பு மற்றும் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு வலுவாக உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ரஷ்யா ஆதரவளிக்கிறது. கசான் மற்றும் யெகாடெரின்பர்க் ஆகிய இடங்களில் இரண்டு புதிய இந்திய துணை தூதரகங்களை திறப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது நமது பிராந்திய தொடர்புகளையும், வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகளையும் மேலும் ஆழப்படுத்தும். ரஷ்ய இராணுவத்தில் சேவை செய்யும் இந்தியர்களின் பிரச்சனை குறித்தும் நான் பேசினேன். பலர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.
உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்களுக்கான எங்கள் பொதுவான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினோம். சமகால யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில், ஐ.நா. பாதுகாப்புக் குழுவை விரிவுபடுத்துவதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்தினோம். ஜி20, BRICS மற்றும் SCO ஆகிய அமைப்புகளில் நமது ஒத்துழைப்பு ஆழமாக உள்ளது.
உக்ரைன், மேற்கு ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களில் உள்ள முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்தோம். கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க உரையாடல் மற்றும் இராஜதந்திரம் அவசியம் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்துகிறது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக இணைந்து போராட நாங்கள் தீர்மானித்தோம். பயங்கரவாதத்திற்கு எதிராக ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ கொள்கையை கடைப்பிடிப்பதற்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை நான் தெரிவித்தேன். பல ஆண்டுகளாக நமது உறவுகளை வலுப்படுத்தி வரும் அதே உணர்வுடன் இந்த உறவை மேலும் வளர்க்க ஆவலுடன் உள்ளோம் என்று அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
