தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், அதன் தலைவர் விஜய், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆவேசமாக பேசினார். அவரது பேச்சில் இருந்து சில முக்கிய பகுதி இதோ:
“தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை கிழக்கு வேட்பாளர் விஜய், மதுரை மேற்கு வேட்பாளர் விஜய், மதுரை வடக்கு வேட்பாளர் விஜய், மேலூர் விஜய், திருப்பரங்குன்றம் விஜய், சோழவந்தான் விஜய்… அனைத்துத் தொகுதிகளிலும் விஜய் என்று பார்க்கிறீர்களா? ஆம், 234 தொகுதிகளிலும் உங்கள் விஜய்தான் வேட்பாளர். உங்கள் வீட்டில் இருக்கும் ஒருவர்தான் வேட்பாளர். இந்த முகத்துக்காக நீங்கள் போடும் ஓட்டு, உங்கள் வீட்டில் இருக்கும் உங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றது போன்றதாகும்” என்று கூறினார்.
“தூத்துக்குடி ஸ்னோலின் அம்மா, என்னை அவர்களின் தம்பி என்றும், அவர்களின் பெண்ணுக்கு நான் தாய் மாமன் என்றும் சொன்னார்கள். அந்த அக்காவுடைய குழந்தைக்கு மட்டுமல்ல, என்னை சகோதரராக நினைக்கும் அனைவருக்கும் நான் தாய்மாமனாக இருப்பேன்” என்று கூறினார்.
“நீங்கள் எல்லாம் என்னுடைய ரத்த உறவு, உடன் பிறந்த பிறப்பு. உங்கள் ரேஷன் கார்டில் வேண்டுமானால் என் பெயர் இல்லாமல் இருக்கலாம். என்னுடைய வீட்டு ரேஷன் கார்டில் உங்கள் பெயர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் எல்லாம் ஒன்றுதான், உறவுதான்” என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், தனது அரசியல் வருகை குறித்து பேசிய விஜய், “சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும். வேடிக்கை பார்க்க சிங்கம் வெளியே வராது” என்று கூறினார். “நான் அரசியலுக்கு வர மாட்டேன், மாநாடு நடத்த மாட்டேன் என்று எதிரிகள் சொன்னார்கள். இப்போது பாருங்கள், நான் ஆட்சியைப் பிடிக்க மாட்டேன் என்கிறார்கள். தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது” என்றார்.
பாஜகவை மறைமுகமாக விமர்சித்து, “பாசிச பாஜகவுடன் மறைமுகக் கூட்டுக்குச் செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா?” என்று கேள்வி எழுப்பினார். திமுகவைச் சாடி, “பொய் வாக்குறுதிகள் கொடுத்து திமுக எல்லோரையும் ஏமாற்றுகிறது” என்று கூறினார்.
“நான் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை, படைக்கலனுடன் வந்துள்ளேன். வாழ்நாள் முழுக்க மக்களுடன் இருப்பேன். நல்லது செய்ய மட்டுமே வந்திருக்கிறேன். மக்களுக்குப் பணி செய்து கிடப்பதே என் கடன்” என்று கூறி தனது உரையை முடித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
