ஒரு பக்கம் இந்தியா மீது அடுக்கடுக்கான வரிகளை அமெரிக்க அரசு விதித்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஐபோன் உற்பத்தியை அதிகரித்துள்ளது. இதன் மூலம் சீனாவை சார்ந்திருப்பதை குறைக்கவும், அமெரிக்காவின் வரி கொள்கைகளால் ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, வரவிருக்கும் ஐபோன் 17 தொடரின் அனைத்து நான்கு மாடல்களின் தயாரிப்பையும் இந்தியாவில் உள்ள ஐந்து உள்நாட்டு தொழிற்சாலைகளுக்கு மாற்றியுள்ளது. இதன்மூலம், புதிய ஐபோன் மாடல்கள் அனைத்தும் முதல் முறையாக இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்பட உள்ளன.
இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தி விரிவாக்கம்
இந்த உற்பத்தி விரிவாக்கத்திற்கு, தமிழகத்தின் ஒசூரில் உள்ள டாடா குழுமத்தின் புதிய தொழிற்சாலை மற்றும் பெங்களூரு விமான நிலையம் அருகே உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மற்றொரு தொழிற்சாலை ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், இந்தியாவின் ஐபோன் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதியை டாடா உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் அமெரிக்க சந்தை
இந்த உற்பத்தி மாற்றம், இந்தியாவின் ஏற்றுமதி எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியுள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரை, இந்தியா 7.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த முழு நிதியாண்டின் மொத்த ஏற்றுமதியான 17 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். இதில், அமெரிக்கா ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக உருவெடுத்துள்ளது. 2024-இன் முதல் பாதியில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 53% ஆக இருந்த நிலையில், ஜூன் 2025-க்குள் அது 78% ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் வரிக் கொள்கைகளும் ஆப்பிளின் நிலைப்பாடும்
டிரம்ப் நிர்வாகம், அதிக வரிகளை விதித்து வரும் நிலையில், இந்த உற்பத்தி மாற்றம் நிகழ்கிறது. ஸ்மார்ட்போன்கள் இதுவரை வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்காவில் உற்பத்தி செய்யாததற்காக ஆப்பிள் போன்ற நிறுவனங்களை டிரம்ப் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். இருப்பினும் ஆப்பிள் நிறுவனர் டிம் குக் அமெரிக்க அதிபரின் விமர்சனத்தையும் மீறி இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார். இதில் இருந்து அமெரிக்க அரசு இந்தியாவுக்கு எதிராக இருந்தாலும், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவை பகைத்து கொள்ள விரும்பவில்லை என்பதும், இந்தியாவுக்கு தரும் ஆதரவை தொடர்ந்து கொண்டு வருகிறது என்பதும் தெரிய வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
