டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை உயர்த்தியது மட்டுமின்றி மேலும் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கும் வரிவிதிப்பை விரிவுபடுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை மேலும் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய வரிகளால் பாதிக்கப்பட்ட பொருட்கள்
புதிய வரிகள், 400-க்கும் மேற்பட்ட தயாரிப்பு வகைகளை பாதிக்கின்றன. இதில் அன்றாட பயன்பாட்டு பொருட்களான வெண்ணெய் கத்திகள், குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகள், ஸ்ப்ரே டியோடரண்டுகள், தீயணைப்பு கருவிகள் மற்றும் சில முக்கிய நுகர்வோர் பொருட்கள் அடங்கும். மேலும், காற்றாலைகள், கிரேன்கள், புல்டோசர்கள் மற்றும் ரயில் பெட்டிகள் போன்ற தொழிற்துறை பொருட்களும் இந்த வரிகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
நிர்வாகத்தின் நோக்கம்
இந்த வரிகளை விரிவுபடுத்துவதன் நோக்கம், அமெரிக்காவின் எஃகு மற்றும் அலுமினிய தொழில்களை புத்துயிர் பெற செய்வதும், ஏற்கனவே இருக்கும் வரிகளை ஏமாற்றுவதை தடுப்பதும் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் மீதான தாக்கம்
ஆனால் டிரம்ப் விதித்த இந்த வரிகள் பணவீக்க அழுத்தத்தை அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில், இந்த வரிகள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ப்ராக்டர் & கேம்பிள், நைக், பெஸ்ட் பை, ஹோம் டிப்போ, ஹாஸ்ப்ரோ, அடிடாஸ் மற்றும் வால்மார்ட் போன்ற பல பெரிய நிறுவனங்கள், இந்த வரிகள் காரணமாக விலைகளை உயர்த்த போவதாக ஏற்கனவே எச்சரித்துள்ளன, சில நிறுவனங்கள் ஏற்கனவே விலைகளை உயர்த்தியுள்ளன.
வரிகளின் செலவை யார் ஏற்கிறார்கள்?
வரிகளின் செலவை யார் சுமப்பார்கள் என்பது குறித்து விவாதம் உள்ளது. டிரம்ப் நிர்வாக அதிகாரிகள், வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களே சந்தை பங்கை தக்கவைக்க இந்த செலவுகளை ஏற்கும் என்று வாதிடுகின்றனர். ஆனால், இறக்குமதி விலைகள் உயர்ந்து வருவதால், அமெரிக்க நிறுவனங்களும், நுகர்வோர்களும் தான் இந்த நிதி சுமையை தாங்குகிறார்கள் என்பது தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் டிரம்ப் தனது சொந்த நாட்டு மக்களுக்கு சொந்த காசில் சூன்யம் வைப்பதாகவும், இவர் போன்ற ஒரு மோசமான அதிபரை பார்த்ததில்லை என்றும் அமெரிக்க மக்கள் கொந்தளித்துள்ளனர்.
வல்லரசு நாடு என்று உலகையே ஆட்டி வைத்து நாட்டாமை செய்த காலமெல்லாம் போய்விட்டது, இனி அமெரிக்கா அடக்கி வாசிக்கவில்லை என்றால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
