இந்தியாவுக்கு தொடர்ந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்கப்பட்டு வரும் நிலையில் மேலும் சில தள்ளுபடிகளை இந்தியாவுக்கு வழங்குவோம் என ரஷ்யா உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மீது அமெரிக்கா வரிகள் மற்றும் தடைகளை அதிகரித்து வரும் சூழலில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு கூடுதம் தெம்பை அளித்துள்ளது.
இந்தியாவிற்கான ரஷ்யாவின் வர்த்தக துணைப் பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா, எதிர்கால எண்ணெய் விநியோகங்கள் குறித்துப் பேசுகையில் “இந்தியாவிற்கான ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலில் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டு 5% தள்ளுபடி இருக்கும் என்றும், கூடுதல் தள்ளுபடிக்கும் ஆலோசனை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி அளவு தொடர்ச்சியாக அதிகரிக்கும் என்றும், தள்ளுபடிகள் “வணிக ரகசியம்” என்றாலும், அது பொதுவாக 5% இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவுடனான நீண்டகால உறவை ரஷ்யா நம்புவதாக தெரிவித்த அவர் இது இந்தியாவுக்கு ஒரு சவாலான சூழ்நிலை, ஆனால் எங்கள் உறவுகளில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. வெளிப்புற அழுத்தங்கள் இருந்தபோதிலும் இந்தியா-ரஷ்யா எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
மேற்கத்திய சந்தைகளால் புறக்கணிக்கப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குவது, உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் இந்திய ஏற்றுமதிக்கு 50% வரி விதித்தார். இந்த நடவடிக்கை ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு தள்ளும் நோக்கம் கொண்டது என்று அமெரிக்கா வாதிடுகிறது.
வெள்ளை மாளிகை செய்திச் செயலாளர் கரோலின் லீவிட், இந்தத் தடைகள் ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்குள் தள்ளும் உத்தியின் ஒரு பகுதி என்று கூறினார். “இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் மிகப்பெரிய பொது அழுத்தத்தை அளித்துள்ளார். இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த, அவர் இந்தியா மீது தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளை எடுத்துள்ளார்,” என்று லீவிட் தெரிவித்தார்.
மொத்தத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரிவிதித்து நெருக்கடி கொடுக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயன்றார், ஆனால் இந்த நெருக்கடியால் ரஷ்யா, இந்தியாவுக்கு கூடுதல் தள்ளுபடி என்று அறிவித்துள்ளது இந்தியாவுக்கான ஜாக்பாட் என கருதப்படுகிறது.
இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க கொடுக்க, ரஷ்யா உள்பட உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தருவதும் அதிகரித்து வருகிறது. எனவே டிரம்ப் நினைத்தது என்றுமே இந்த விஷயத்தில் நடக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
