டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக விதித்துள்ள புதிய வரிகள் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்திச் செயலாளர் கரோலின் லீவிட் வெளியிட்டுள்ள கருத்துகள், இந்திய-அமெரிக்க வர்த்தக உறவுகள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, ரஷ்யாவின் மீது “இரண்டாம் நிலை அழுத்தம்” கொடுக்கும் விதமாக, இந்தியப் பொருட்களுக்கு புதிய வரிகளை விதித்துள்ளதாக கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்திய பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டு, மொத்த வரியின் அளவு 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரஷ்ய எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குவதற்கு எதிராகவும், ரஷ்யாவை வர்த்தக ரீதியாக தனிமைப்படுத்தும் நோக்கத்துடனும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லீவிட் விளக்கினார். இந்தியா மீது வரி விதித்தால் தான், ரஷ்யா, போரை முடிவுக்கு கொண்டு வர ஒப்புக்கொள்ளும் என்றும், இது டிரம்பின் ஒரு ராஜதந்திரம் என்றும் அவர் தெரிவித்தார். இது அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் வர்த்தக கொள்கையில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கியமான மாற்றம் என கருதப்படுகிறது. இந்த முடிவானது, உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையை முன்னெடுத்து, போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாகவும் லீவிட் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய தலைவர்களும் இந்த அமைதி முயற்சியை ஆதரிப்பதாக அவர் கூறினார்.
இந்த வர்த்தக வரிகள் இந்தியாவிற்கு ஒரு சவாலாக அமைந்துள்ள நிலையில், இந்தியாவின் வர்த்தக துறை, இந்த சவாலை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
