இந்தியப் பொருட்களுக்கு எதிராக அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், இந்தியாவிற்கான ரஷ்ய தூதரகத்தின் பொறுப்பாளர் ரோமன் பாபுஷ்கின், இந்திய பொருட்களுக்கு ரஷ்யா சந்தை வாய்ப்பை அளிக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
பாபுஷ்கின் கூறுகையில், அமெரிக்க சந்தைக்குள் இந்தியப்பொருட்கள் நுழைவதில் சிரமங்களை எதிர்கொண்டால், ரஷ்ய சந்தை இந்திய இறக்குமதியை “முடிந்தவரை வரவேற்கும்” என்று தெரிவித்தார். அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான வர்த்தக நடவடிக்கைகள், விநியோக சங்கிலிகளை சீர்குலைத்து, விலை ஏற்றங்களுக்கும், உலக சந்தைகளின் ஸ்திரமின்மைக்கும் வழிவகுக்கும் என்று அவர் கடுமையாக விமர்சித்தார். இத்தகைய அழுத்தங்கள் “நியாயமற்றவை” மற்றும் “ஒருதலைப்பட்சமானவை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சில மேற்கத்திய நாடுகள் தாங்கள் தான் உலகின் மிகப்பெரிய வர்த்தக நாடுகள் போல செயல்படுகிறது என்றும், இந்த நாடுகள் மற்ற நாடுகளை சுரண்டி, தங்கள் சொந்த நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கின்றன என்றும் அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள், ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தில் எந்தவொரு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் ரஷ்யா இந்த துறையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சேவைகளை சார்ந்திருப்பதை குறைத்துக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இந்த செய்தி, அமெரிக்காவின் வரிவிதிப்பால் அழுத்தத்தில் இருந்த இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
