இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல், குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை ரத்து செய்து, அதிக விலை திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் பயனர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஜியோ நிறுவனம் ஏற்கனவே தனது ரூ.249 தினசரி 1ஜிபி டேட்டா திட்டத்தை ரத்து செய்துள்ளது. இதேபோல, ஏர்டெல் நிறுவனமும் தனது மலிவு விலை திட்டமான ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை ஆகஸ்ட் 20 முதல் அதாவது நாளை அதிகாலை முதல் நிறுத்தவுள்ளது. இந்த தகவல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி மற்றும் இணையதளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏர்டெல் ரூ.249 திட்டத்தின் விவரங்கள்
ஏர்டெல்லின் தொடக்க நிலை ப்ரீபெய்ட் திட்டமாக கருதப்பட்ட ரூ.249 ரீசார்ஜ், தினமும் 1ஜிபி டேட்டா, வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள், மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை 24 நாட்களுக்கு வழங்கியது. குறுகிய கால தேவை கொண்ட பல வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்போது இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
திட்டத்தை நிறுத்துவதற்கான அறிவிப்பு ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் வெளியிடப்பட்டுள்ளது. “ஆகஸ்ட் 20, 2025 அன்று நள்ளிரவு 00:00 மணி முதல், ரூ.249 ரீசார்ஜ் நிறுத்தப்படும்” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களை அதிக விலை கொண்ட திட்டங்களுக்கு மாற்றும் ஒரு நோக்கமாக கருதப்படுகிறது.
ஏர்டெல் தனது குறைந்த விலை திட்டங்களை நிறுத்தி வருவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அவ்வப்போது சேவைகள் பாதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
