2025-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் 9 முதல் 28 வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில், உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் மீண்டும் இடம் பெற்றுள்ளனர். அதே சமயம், ஜனவரி-பிப்ரவரி 2025-இல் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஆறு வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அணியில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள்: சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் ஆசிய கோப்பைக்கான இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். சுப்மன் கில் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை 30 அன்று இலங்கைக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடினார். பும்ரா மற்றும் குல்தீப் இருவரும் 2024 டி20 உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு பிறகு டி20 போட்டிகளில் விளையாடவில்லை. விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா ஜனவரி 14, 2024க்குப் பிறகு அணியில் இடம் பெறவில்லை.
அணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்: முகமது ஷமி, நிதீஷ் குமார் ரெட்டி, ராமந்தீப் சிங், ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் இத்தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நிதீஷ் குமார் ரெட்டி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக காயம் காரணமாக விலகினார். மற்ற ஐந்து வீரர்களும் ஐபிஎல் 2025-இல் எதிர்பார்த்த அளவில் சோபிக்காததால் நீக்கப்பட்டுள்ளனர்.
சூர்யகுமார் யாதவ் மற்றும் தொடக்க வீரர் குழப்பம்
சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து டி20 அணிக்கு கேப்டனாகச் செயல்படுவார். ஐபிஎல் 2025 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 16 போட்டிகளிலும் 25 ரன்களை கடந்து, மொத்தம் 717 ரன்களை குவித்து ‘Most Valuable Player’ விருதை வென்ற சூர்யகுமார், ஆசிய கோப்பையிலும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணியின் தொடக்க வீரர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. கடந்த மூன்று டி20 தொடர்களில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆனால், துணை கேப்டனாக சுப்மன் கில் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது, தொடக்க வீரர் வரிசையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதால், அவர் கண்டிப்பாக விளையாடும் லெவனில் இடம் பெறுவார். அப்படி என்றால், அவருக்கு பக்கபலமாக யார் விளையாடுவார் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். சஞ்சு சாம்சன் அணியின் முதல் தேர்வாக கருதப்படும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன். இது அவருக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால், அபிஷேக் ஷர்மா இங்கிலாந்துக்கு எதிரான தனது கடைசி போட்டியில் 54 பந்துகளில் 135 ரன்கள் அடித்துள்ளார். எனவே, அவரை நீக்குவது ஒரு கடினமான முடிவாக இருக்கும்.
ஆசிய கோப்பை 2025க்கான இந்திய அணி வீரர்கள்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
