உலக அதிகார மையம் என்று அமெரிக்கா நினைத்து கொண்டு இந்தியா உள்பட பல நாடுகளை அடக்கி வைக்க முயற்சித்த நிலையில், இந்தியா தங்கள் இறையாண்மையை நிலைநாட்டும் நடவடிக்கை எடுத்து வருவதை அடுத்து உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறது. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்ற அமெரிக்காவின் அழுத்தம் இருந்தபோதிலும், தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடர்ந்தது. இது இந்தியாவின் தைரியமான முடிவை உலகிற்கு உணர்த்தியது.
தண்டனைகள் ஒரு கட்டுப்பாட்டுக் கருவியா?
பொருளாதாரத் தடைகள் என்பது நீதிக்கான ஒரு கருவி அல்ல என்றும், அது அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள், மற்ற நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க பயன்படுத்தும் ஒரு ஆயுதமாக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தது. கடந்த காலத்தில், அமெரிக்கா தனக்கு நிகரில்லாத இராணுவ, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வலிமையைக் கொண்டிருந்தபோது இந்த உத்தி சிறப்பாக வேலை செய்தது.
ஆனால் அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்பட்ட பழைய உலக அமைப்பு இப்போது காலாவதியாகிவிட்டது. இந்தியா, சீனா, மற்றும் ரஷ்யா போன்ற புதிய பொருளாதாரங்க நாடுகள், புதிய அமைப்புகள், கூட்டணிகள் மாற்று சக்தியாக உருவாகி, டாலருக்கு பதிலாக மாற்று நாணயங்களையும் உருவாக்கி வருகின்றன. இதனால், பொருளாதார தடைகள் முன்பு போல் இப்போது பலனளிப்பதில்லை.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு வரி விதித்து, இந்தியா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக நினைப்பது ஒரு தவறான கணிப்பு. இந்தியா போன்ற வளர்ந்து வரும் வல்லரசுகளுக்கு எதிராக அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும் செல்வாக்கு செலுத்தும் வழிகள் இப்போது பயனற்றதாகிவிட்டன. புதிய உலகம் என்பது ஒரு பேரரசின் கீழ் இல்லாமல், நாடுகள் தங்கள் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் செயல்படும் அதிகார முனைகளாக மாறி வருகிறது.
இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடாக மட்டுமல்ல, ஏற்கெனவே வளர்ந்துவிட்ட நாடாகவும் உள்ளது. இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இளைஞர்கள் மக்கள் தொகை மற்றும் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் விரைவான புதுமைகளுடன் இந்தியா முன்னேறி வருகிறது. உலகளாவிய அதிகாரம் என்பது ஆதிக்கம் செலுத்துவதை பொறுத்ததல்ல, மாறாக பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு மற்றும் ஒரு தேசத்தின் சொந்த தேவைகளின் அடிப்படையில் செயல்படும் திறனை பொறுத்தது என்று இந்தியா, அமெரிக்காவுக்கு பாடம் நடத்தி வருகிறது. அந்த பாடத்தை அமெரிக்கா கற்றுக்கொண்டால், அமெரிக்காவுக்கும் நல்லது, உலக நாடுகளுக்கும் நல்லது. அதைவிட்டு நான் தான் நாட்டாமை என்ற ரீதியில் அமெரிக்கா இன்னும் செயல்பட்டு கொண்டிருந்தால், அதன் அழிவு ஆரம்பமாகிவிடும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
