நாடு முழுவதும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா’ (PMVBRY) திட்டத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கான இணையதளத்தையும் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். சுமார் ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கொண்ட இந்த முக்கிய திட்டத்தைப் பயன்படுத்தி வேலை தேடுபவர்களும், வேலை அளிப்பவர்களும் பயனடையுமாறு அவர் வலியுறுத்தினார்.
திட்டத்தின் நோக்கம் மற்றும் தகுதிகள்
கடந்த ஜூலை 1, 2025 அன்று மத்திய அமைச்சரவை, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்க திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது இரண்டு ஆண்டுகளுக்குள் 3.5 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சரின் கூற்றுப்படி, இந்த திட்டம் ஆகஸ்ட் 1, 2025 முதல் ஜூலை 31, 2027 வரை செயல்பாட்டில் இருக்கும். இத்திட்டத்தின் கீழ், அனைத்து முதலாளிகளும் மற்றும் முதல் முறையாக வேலைக்குச் சேரும் ஊழியர்களும் பயனடையலாம்.
ஊழியர்கள் தங்கள் UAN எண்ணை இணையதளத்தில் அல்லது ‘உமாங்’ (UMANG) செயலி மூலம் பதிவேற்றம் செய்து இந்த ஊக்கத்தொகையை பெறலாம். திட்டத்தின் பகுதி A-வின் கீழ், முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு, ஒரு மாத சராசரி ஊதியத்திற்கு (அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி), அதிகபட்சமாக ரூ.15,000 வரை ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படும். இது இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.
முதலாளிகளுக்கான ஊக்கத்தொகை
முதலாளிகள் மூன்று வகையான ஊக்கத்தொகை slabs-இன் கீழ் பயன் பெறலாம். ஒரு ஊழியரின் மாத சம்பளம் ரூ.10,000 ஆக இருந்தால், முதலாளிக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைக்கும். சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை இருந்தால் ரூ.2,000 கிடைக்கும். ரூ.30,000 வரை சம்பளம் பெறும் புதிய ஊழியர்களை பணியமர்த்தும் முதலாளிகளுக்கு ரூ.3,000 ஒரு முறை ஊக்கத்தொகை கிடைக்கும்.
அமைச்சகத்தின் குறிப்பின்படி, மொத்த ஊதியம் ரூ.1 லட்சம் வரை உள்ள ஊழியர்கள் பகுதி A-வின் கீழ் தகுதியுடையவர்கள். பகுதி B, அனைத்து துறைகளிலும், குறிப்பாக உற்பத்தித் துறையில், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஊக்கத்தொகையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஒரு நிறுவனத்திற்கு, குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து பணியில் இருக்கும் ஒவ்வொரு கூடுதல் ஊழியருக்கும் (முதல் முறையாக சேருபவர்கள் மற்றும் மீண்டும் பணியில் சேருபவர்கள் இருவரும்), மாதத்திற்கு ரூ.3,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்த ஊக்கத்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். ஆனால், உற்பத்தி துறையை சேர்ந்த நிறுவனங்களுக்கு இந்த ஊக்கத்தொகை நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
