பல்வேறு இணையதள மோசடிகள் மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் பற்றிய தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அவர்களின் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஒன்று அவருடைய கேரக்டராகவும், இன்னொன்று அவரது மனசாட்சி கேரக்டராகவும் இந்த குறும்படத்தில் வருகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் ‘டிஜிட்டல் கைது’ (Digital Arrest) என்ற புதிய வகை இணைய மோசடி குறித்து தமிழ்நாடு காவல்துறை சைபர் கிரைம் பிரிவு ஒரு விழிப்புணர்வுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த காணொளியில் டிஜிட்டல் அரெஸ்ட்டில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
‘டிஜிட்டல் கைது’ மோசடி எப்படி நடக்கிறது?
இந்த மோசடியில், ஏமாற்றுபவர்கள் பெரும்பாலும் தங்களை சிபிஐ அல்லது அமலாக்கத்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் ஒரு போலி தொலைபேசி அழைப்பு அல்லது வீடியோ அழைப்பு மூலம் உங்களை தொடர்பு கொண்டு, நீங்கள் சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டதாகவோ அல்லது ஒரு குற்றவாளி குழுவுடன் தொடர்புடையதாகவோ குற்றம் சாட்டுவார்கள்.
உதாரணமாக, வெளிநாட்டிற்கு போதைப்பொருள் கொண்ட பார்சலை நீங்கள் அனுப்பியுள்ளதாகவும், அது சுங்கத்துறையிடம் பிடிபட்டதாகவும் போலியான தகவலை தருவார்கள். உங்களை நேரில் கைது செய்யப் போவதாகவும், விசாரணையை தவிர்க்க விரும்பினால், ஆன்லைனில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அச்சுறுத்துவார்கள். பின்னர், உங்கள் தனிப்பட்ட தகவல்கள், ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் கடவுச்சொற்கள் போன்றவற்றை மிகவும் புத்திசாலித்தனமாக பெற்றுக்கொள்வார்கள்.
ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
அழைப்பை துண்டிக்கவும்: இதுபோன்ற திடீர் அழைப்புகள் வரும்போது, உடனடியாக அழைப்பை துண்டித்துவிடுங்கள். எந்தவொரு அவசர அல்லது பயமுறுத்தும் தகவலுக்கும் பதட்டப்பட வேண்டாம்.
தகவல்களைப் பகிர வேண்டாம்:
உங்களின் தனிப்பட்ட விவரங்கள், குறிப்பாக வங்கிக் கணக்கு அல்லது ஓடிபி போன்ற ரகசிய தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம். எந்த ஒரு அரசு துறையும் தொலைபேசி வழியாக இதுபோன்ற தகவல்களைக் கேட்பதில்லை.
விழிப்புணர்வுடன் இருங்கள்:
‘டிஜிட்டல் கைது’ என்பது இந்திய சட்டத்தில் இல்லாத ஒரு வார்த்தை. சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தும் ஒரு மோசடி உத்தி இது. இப்படி ஒரு சட்டம் இல்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள்: இதுபோன்ற அழைப்புகள் வந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது சைபர் கிரைம் துறையை தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள்.
முக்கிய எச்சரிக்கை
இந்த மோசடிக்கு, படித்தவர், படிக்காதவர், பணக்காரர், ஏழை என்ற எந்த வித்தியாசமும் இல்லை. நமது பேராசையும், அறியாமையுமே இதுபோன்ற மோசடிகளுக்கு மூல காரணமாக அமைகின்றன. எனவே, ஒவ்வொருவரும் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முக்கியமாக, பெரியவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு இது குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
கார்த்தி நடித்த அந்த விழிப்புணர்வு வீடியோ இதோ
https://x.com/tncybercrimeoff/status/1957048741208408408
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
