உலக அதிகாரம் தற்போது வேகமாக மாறி வருகிறது. அமெரிக்கா தற்போது எடுத்து வரும் ஒரு ஆபத்தான நகர்வு, உலக பொருளாதாரத்தில் இந்தியாவுக்கு ஒரு புதிய தலைமை இடத்தை உருவாக்கும் என்று அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா கூறியுள்ளது அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. அவரது இந்த கருத்து ஒரு கணிப்பு மட்டுமல்ல, ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் ஒரு யதார்த்தம் என்றும், இந்த மாற்றத்தை புரிந்துகொள்பவர்களுக்கே அடுத்த பத்தாண்டுகள் சொந்தமானது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் மிகப்பெரிய பலமாக இருந்த அதன் திறந்த பொருளாதார கொள்கைகள் தற்போது மாறி வருகின்றன. சர்வதேச வர்த்தகத்தில் வரிகளை அதிகரிப்பது, மற்ற நாடுகளுக்கு எதிராக தடைகளை விதிப்பது போன்ற நடவடிக்கைகளால், அமெரிக்கா உலக அரங்கில் தன்னை தனிமைப்படுத்தி கொள்கிறது. இந்த ‘ஆபத்தான’ நகர்வுகள், மற்ற நாடுகள் அமெரிக்காவை சார்ந்திருப்பதை குறைத்து, புதிய கூட்டணிகளை உருவாக்கி, தங்களுக்கு என ஒரு தனிப்பட்ட பொருளாதார அமைப்பை உருவாக்க தூண்டுகின்றன. நீண்ட காலமாக உலகப் பொருளாதாரத்தின் மையமாக இருந்த அமெரிக்கா தற்போது படிப்படியாக தனது தனித்தன்மையை இழந்து வருகிறது.
அமெரிக்காவின் தவறான நடவடிக்கைகளின் மூலம் இந்தியா மிகப்பெரிய அளவில் பயனடைய தொடங்கியுள்ளது. இந்தியா ஒரு இளம் மற்றும் மிகப்பெரிய மக்கள்தொகையை கொண்டுள்ளது. மேலும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி, ஒரு வலுவான பொருளாதார அடித்தளத்தை உருவாக்கி வருகிறது. இந்தியா ஒரு தனித்துவமான வழியை தேர்ந்தெடுத்துள்ளது. அது அமெரிக்காவை பின்பற்றுவது அல்ல, மாறாக தனக்கென ஒரு புதிய முறையை உருவாக்குவதாகும். அமைப்புகள், தொழில்நுட்பக் கட்டமைப்புகள் மற்றும் புதிய நட்பு நாடுகளை உருவாக்குவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது. இதனால், உலகப் பொருளாதாரத்தின் ஈர்ப்பு மையம் அமெரிக்காவிலிருந்து இந்தியா போன்ற நாடுகளை நோக்கி மாறுகிறது என அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா கூறியுள்ளார்.
உலக வல்லரசு என்ற நிலை, வெளிநாட்டு தாக்குதல்களால் முடிவடைவதில்லை, மாறாக உள்நாட்டு ஆணவத்தாலும், மாறும் உலகிற்கு தகுந்த வகையில் தங்களை மாற்றி கொள்ளத் தவறுவதாலும்தான் ஏற்படுகிறது.
அமெரிக்கா தனது பழைய நிலையை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தியா எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது. இந்த மாற்றத்தின் போக்கை புரிந்துகொண்டு செயல்படும் நாடுகளே அடுத்த பத்தாண்டுகளில் உலகத் தலைமைப் பொறுப்பை வகிக்கும் என அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா தெரிவித்துள்ளது உலக அரசியல் அறிஞர்களை சிந்திக்க வைத்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
