ரஷ்ய அதிபர் புதினுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் இடையே அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தையில் புதின் வெற்றி பெற்றதை அமெரிக்காவும் உணரவில்லை, டிரம்பும் உணரவில்லை, அதுதான் புதினின் சீக்ரெட்.
இந்த பேச்சுவார்த்தை போர் நிறுத்தத்துக்கோ அல்லது அமைதி ஒப்பந்தத்துக்கோ வழிவகுக்கவில்லை. இருப்பினும், இந்த சூழ்நிலையைத் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட புதின், இந்த சந்திப்பின் வெற்றியாளராக கருதப்படுகிறார்.
மேற்கத்திய நாடுகள் டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை குறித்து அதிருப்தி தெரிவித்தபோதிலும், அலாஸ்காவில் புதின் சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் ராணுவ மரியாதையை பெற்றார். மேலும், அமெரிக்காவின் பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் மற்றும் எஃப்-35 போர் விமானம் ஆகியவை புதினுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பறக்கவிடப்பட்டன.
பேச்சுவார்த்தையில் திருப்தி தெரிவித்த புதின், அடுத்த சந்திப்பு மாஸ்கோவில் நடக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஐரோப்பிய தலைவர்களுக்கும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கும் சந்திப்பின் முடிவுகள் குறித்துத் தான் விளக்குவதாக டிரம்ப் தெரிவித்தார்.டிரம்ப் ஐரோப்பிய நாடுகளுடன் கலந்தாலோசிக்க முடிவு செய்ததை வரவேற்று ஜெலென்ஸ்கி ட்வீட் செய்தார்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே மேம்பட்டு வரும் உறவு இந்தியாவுக்கு நன்மை பயக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ரஷ்ய எண்ணெய்யின் முக்கிய இறக்குமதியாளராக உள்ள இந்தியா மீது இரண்டாம் நிலை தடைகளை விதிப்பதை பற்றி மறுபரிசீலனை செய்வதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் டிரம்ப் வரும் திங்கள்கிழமை ஜெலென்ஸ்கியை சந்திப்பார் என்றும், ஐரோப்பிய தலைவர்களுடன் மெய்நிகர் மாநாட்டில் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் அமெரிக்கா தன்னை எதிரி நாடாகப் பேசிய நிலையில், அமெரிக்கா ரஷ்ய அதிபரை அழைத்து இவ்வளவு மரியாதையுடன் நடத்தியது ரஷ்யாவுக்கு ஒரு பெரிய வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இல்லை, ஐரோப்பாவின் கோபத்தை தணிக்கும் பொறுப்பை டிரம்ப் கையில் புதின் கொடுத்தது, இந்தியா மீது வரிவிதிப்பு இனி இருக்காது, எண்ணெய் வாங்குவதிலும் சிக்கல் இருக்காது, உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய நிலத்தை திருப்பி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை, அமெரிக்காவுடன் ஒரு புதிய நட்பு என புதின் இந்த பேச்சுவார்த்தையும் தான் நினைத்தது எல்லாவற்றையும் சாதித்துவிட்டதாகவே கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
