டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புதின் இடையே அலாஸ்காவில் நடைபெற்ற உச்சி மாநாடு, புதின்னுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை தேடித் தந்ததாக இந்தச் சந்திப்பு குறித்து ஆழமாக அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சட்டபூர்வமான அங்கீகாரம்
இந்த சந்திப்பின் மூலம், புதின் சர்வதேச அரங்கில் ஒதுக்கப்பட்டவர் என்ற முத்திரையை அகற்றி, ரஷ்யாவை ஒரு சட்டபூர்வமான வர்த்தக மற்றும் புவிசார் அரசியல் கூட்டாளியாக மீண்டும் நிலைநிறுத்தினார். கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எந்தவொரு உச்சி மாநாடும் நடைபெறாத நிலையில், இந்த சந்திப்பு ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது.
உக்ரைனில் ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்கள் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாதவை என்பதை புதின், டிரம்ப் முன்பே தெளிவுபடுத்தினார். இந்த சந்திப்பின்போது ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திடாமல் அதே நேரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான பொறுப்பை டிரம்ப் மீது புதின் சுமத்தி தப்பித்துவிட்டார். டிரம்ப் நேட்டோ மற்றும் உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கியை தொடர்புகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார் என்று குறிப்பிட்டு நைசாக ஒதுங்கி கொண்டார்.
இந்த உச்சி மாநாட்டிற்குப் புதின் ஒரு திட்டத்துடன் வந்ததாகவும், வெற்றியுடன் திரும்பியதாகவும் இந்த சந்திப்பின் மூலம் அமெரிக்கா அவரை ஒருவகையில் சட்டப்பூர்வமாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தனது நெருங்கிய கூட்டாளி இந்தியாவையும் அவர் இந்த சந்திப்பின்மூலம் காப்பாற்றியுள்ளார். இந்த சந்திப்பு வெற்றி இல்லை என்றாலும் தோல்வி இல்லை என்பதை டிரம்ப் வாயாலேயே சொல்ல வைத்து, இந்தியா மீது அடுத்தகட்ட நடவடிக்கை இப்போதைக்கு இல்லை என்பதை உறுதி செய்துள்ளார்.
மொத்தத்தில் நோபல் பரிசு பெற ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் டிரம்ப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தாலும், புதின் நினைத்ததை முடித்த திருப்தியுடன் நோபல் பரிசை விட ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பரிசை கையோடு எடுத்து சென்றது தான் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
