வாகன பாலிசி எடுக்க போகிறீர்களா? இந்த விஷத்தை எல்லாம் ஏஜண்டுகள் சொல்ல மாட்டார்கள்.. கவனமாக இருங்கள்.. இல்லையெனில் காசு வேஸ்ட்..!

இந்தியாவின் பயணிகள் வாகன சந்தை தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் வளர்ச்சி கண்டு வருகிறது. 2024-25 நிதியாண்டில் உள்நாட்டு வாகன விற்பனை 4.30 மில்லியன் யூனிட்டுகளை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 1.97%…

motor insurance

இந்தியாவின் பயணிகள் வாகன சந்தை தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் வளர்ச்சி கண்டு வருகிறது. 2024-25 நிதியாண்டில் உள்நாட்டு வாகன விற்பனை 4.30 மில்லியன் யூனிட்டுகளை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 1.97% அதிகமாகும். வாகன விற்பனை அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலான புதிய வாகன உரிமையாளர்கள் வாகன காப்பீட்டின் நுட்பமான அம்சங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். இந்த அறியாமை, அவர்களுக்கு பண இழப்பை ஏற்படுத்தக்கூடும் அல்லது காப்பீட்டு தொகையைப் பெறும்போது சிக்கல்களை உருவாக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

வேகமாக வளரும் வாகனக் காப்பீட்டுச் சந்தை

இந்தியாவில் வாகன விற்பனை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் வாகன காப்பீட்டு சந்தையும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2024-ல் இதன் மதிப்பு 11.39 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2034ஆம் ஆண்டிற்குள் இந்தச் சந்தை 30 பில்லியன் டாலர்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன காப்பீடு, பொது காப்பீட்டுத் துறையின் 31.68% பங்கைக் கொண்டுள்ளது. மேலும், வாகன உரிமையாளர்கள் அதிகரிப்பு, கட்டாய காப்பீட்டு விதிகள், ஆன்லைன் கொள்கைகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான சிறப்பு காப்பீட்டுத்திட்டங்களுக்கான தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்த துறை தொடர்ந்து 9% வளர்ச்சியைக் கண்டு வருகிறது.

புதிய வாடிக்கையாளர்கள் செய்யும் பொதுவான தவறுகள்

பெரும்பாலான புதிய வாகனக் காப்பீட்டு வாடிக்கையாளர்கள், பிற பாலிசிகளை ஒப்பிட்டுப் பார்க்காமல், வெறும் அடிப்படை மூன்றாம் தரப்புக் காப்பீட்டை (Third-party coverage) மட்டும் வாங்குவது ஒரு பொதுவான தவறு. மேலும், தேவையான பாதுகாப்பை குறைத்து மதிப்பிடுவது, சரியான தகவல்களை வழங்காமல் இருப்பது, அல்லது பாலிசி நிபந்தனைகளை முழுமையாகப் படிக்காமல் இருப்பது போன்ற தவறுகளால், பின்னர் காப்பீட்டு தொகை கோரும்போது சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்று இந்த துறையின் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

காப்பீடு எடுக்கும்போது எடுக்க வேண்டிய மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று, வாகனத்தின் காப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்வது. வாகனத்தின் தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் இந்த தொகையை நிர்ணயிக்க வேண்டும் என்றும், வெறும் மூன்றாம் தரப்பு காப்பீட்டை மட்டும் வாங்காமல், விரிவான காப்பீட்டை தேர்வு செய்ய வேண்டும்.

காப்பீட்டுத் திட்டத்துடன் கிடைக்கும் ‘கூடுதல் இணைப்புகள்’ குறித்தும் பல வாகன உரிமையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். பூஜ்ஜிய தேய்மானம் , எஞ்சின் பாதுகாப்பு, மற்றும் சாலை உதவி போன்ற நன்மைகளை வழங்கும் இணைப்புகள் சிறந்த தேர்வாகும். ஏனெனில், இது அவசர காலங்களில் அல்லது பெரிய பழுதுகளின்போது சொந்தமாக செலவு செய்வதை குறைக்க உதவும்.

அதே சமயம், டயர் பாதுகாப்பு , மற்றும் உடைமைகள் இழப்பு போன்ற சில இணைப்புகள் பெரும்பாலும் தேவையில்லாதவை. இவை பெரும்பாலும் வாங்கப்பட்டாலும், அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன

வாடிக்கையாளர்கள் ஆன்லைன் காப்பீட்டு தளங்களை பயன்படுத்தி பாலிசிகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும், தேவையான இணைப்புகளை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும், ‘கிளைம் செய்யாத போனஸை’ பயன்படுத்திக்கொள்ள வேண்டும், மேலும் பிரீமியத்தை குறைக்க தேவையான அம்சங்களை ஆராய வேண்டும். பிரிமியத்தை குறைக்கும் வழிகள் குறித்து இன்சூரன்ஸ் ஏஜண்ட்டுக்கள் சொல்ல மாட்டார்கள்.

பாலிசியில் உள்ள சிறு எழுத்துக்களில் உள்ள விவரங்களை கண்டிப்பாக படிக்க வேண்டும். முதல்முறை பாலிசி எடுக்கும் வாடிக்கையாளர்கள் பாலிசியை இறுதி செய்வதற்கு முன்பு காப்பீட்டுத் தொகைக்கான வரம்புகள், கூடுதல் இணைப்புகளுக்கான நிபந்தனைகள், புதுப்பித்தல் விதிகள் மற்றும் காப்பீட்டு தொகை கோரும் நடைமுறை ஆகியவற்றை கவனமாக படிக்க வேண்டும். இந்த விவரங்களை தவிர்ப்பது, பின்னர் உங்களுக்கு சேர வேண்டிய தொகையையும், நீங்கள் செலுத்த வேண்டிய தொகையையும் பாதிக்கும்.

இந்தியாவில் வாகன உரிமையாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், காப்பீட்டு வகைகள், கூடுதல் இணைப்புகள், அவற்றின் விலை மற்றும் பாலிசி நிபந்தனைகள் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்..