ஒரே நேரத்தில் தாக்கும் 2 கத்திகள்.. ஒன்று AI.. இன்னொன்று டிரம்ப்.. தள்ளாடும் IT துறை.. ஊழியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..

இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை (IT), பல்வேறு சவால்களை சந்தித்து வருவதாகவும், அதனால் சரிவை நோக்கிச் செல்வதாகவும் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் போன்ற…

IT department

இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை (IT), பல்வேறு சவால்களை சந்தித்து வருவதாகவும், அதனால் சரிவை நோக்கிச் செல்வதாகவும் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் போன்ற காரணங்களால் இத்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவின் தாக்கம்

செயற்கை நுண்ணறிவு, ஐ.டி. துறையில் வேலை இழப்புகளுக்கு ஒரு முக்கிய காரணமாக மாறியுள்ளது. மைக்ரோசாஃப்ட், கூகுள், இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் கூட ஊழியர்களைப்பணிநீக்கம் செய்துள்ளது என்பதை பார்த்து வருகிறோம். அதுமட்டுமின்றி அடுத்த பத்தாண்டுகளில் 45-60% ஐ.டி. சேவைகள் பாதிக்கப்படலாம். காரணம், ஒரு மூத்த மென்பொருள் பொறியாளரின் வேலையை ஒரு AI மின்னல் வேகத்தில் செய்துவிடும் என்றும், பத்து இளநிலை ஊழியர்களின் வேலையை சில நொடிகளில் செய்து முடிக்கும் திறன் அதற்கு உண்டு என்பதும் ஐடி துறை ஊழியர்களுக்கு ஒரு பெரும் பின்னடவே.

டொனால்ட் ட்ரம்ப்பின் வரிக் கொள்கைகள்

AI போதாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வரி கொள்கைகளும் இந்திய ஐ.டி. துறைக்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த வரி கொள்கைகள் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், மறைமுகமாக நிறுவனங்களை செலவு குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க தூண்டலாம். இதனால் பணிநீக்கங்கள் அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்கு கொடுக்கும் ஆர்டர்களை குறைக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.

பணிநீக்கங்களும், சவால்களும்

டிசிஎஸ் 12,000 ஊழியர்களையும், மெட்டா, டெல், அமேசான் போன்ற நிறுவனங்கள் கூட்டாக 60,000க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளன. டிசிஎஸ்-இன் வருவாய் வளர்ச்சி 1.3% ஆகவும், இன்போசிஸ்-இன் வளர்ச்சி 3.8% ஆகவும், விப்ரோவின் வருவாய் 2.3% சரிந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ், வியட்நாம், கிழக்கு ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்கள் புதிய மென்பொருள் மேம்பாட்டு திறன்களில் முன்னணியில் இருப்பதால், உலகளாவிய போட்டி அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் எச்1பி விசாக்கள் மறுக்கப்படும் விகிதம் அதிகரிப்பதும், இதனால் இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே ஊழியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவதும் லாப வரம்புகளைப் பாதிக்கிறது.

1990கள் மற்றும் 2000களில் குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை நியமிக்கும் பழைய நிலைமை இனி சாத்தியமில்லை என்றும், லாப வரம்புகளை பராமரிக்க இத்துறை கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.