வருமான வரி புதிய மசோதா: இனி வரி செலுத்துவோர்களுக்கு கொண்டாட்டம் தான்.. என்னென்ன சலுகைகள்? முழு விவரங்கள்..!

60 ஆண்டுகளுக்கு பிறகு, வருமான வரி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரி செலுத்துவோரின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் பல புதிய சலுகைகளையும், வெளிப்படையான விதிமுறைகளையும் கொண்டுவந்துள்ளது. புதிய மசோதா அடுத்த…

new income tax bill

60 ஆண்டுகளுக்கு பிறகு, வருமான வரி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரி செலுத்துவோரின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் பல புதிய சலுகைகளையும், வெளிப்படையான விதிமுறைகளையும் கொண்டுவந்துள்ளது. புதிய மசோதா அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.

புதிய வரி மசோதாவின் முக்கிய மாற்றங்கள் மற்றும் பலன்கள்

காலக்கெடுவுக்கு பின் தாக்கல் செய்தவர்களுக்கும் ரீஃபண்ட்:

பழைய சட்டத்தின்படி, காலக்கெடு முடிந்த பிறகு வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வோருக்கு, ரீஃபண்ட் தொகை இருந்தாலும் அது கிடைக்காது. ஆனால், புதிய சட்டத்தில் தாமதமாக தாக்கல் செய்தாலும் ரீஃபண்ட் வழங்கப்படும். இது லட்சக்கணக்கான சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும்.

தற்செயலான பிழைகளுக்கு அபராதம் இல்லை:

சிறிய, தற்செயலான பிழைகளுக்கு விதிக்கப்படும் அபராதங்களை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு இந்த புதிய சட்டம் அதிகாரம் வழங்குகிறது. அனைத்து தவறுகளும் வேண்டுமென்றே செய்யப்படுவதில்லை என்பதை இது அங்கீகரிக்கிறது.

வாடகை வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம்:

வீடு அல்லது கடைகளில் இருந்து வாடகை வருமானம் பெறுபவர்கள், இனி தங்கள் வாடகை வருமானத்தில் இருந்து நேரடியாக 30% கழித்துக்கொள்ளலாம். மீதமுள்ள தொகைக்கு மட்டும் வரி செலுத்தினால் போதும். மேலும், சொத்து வாங்குவது, கட்டுவது அல்லது பழுதுபார்ப்பதற்காக வாங்கிய கடனுக்கான வட்டியையும் கழித்துக் கொள்ளலாம்.

எளிமையான சொற்கள்:

குழப்பத்தை ஏற்படுத்தும் ‘நிதி ஆண்டு’ மற்றும் ‘மதிப்பீட்டு ஆண்டு’ ஆகிய சொற்களுக்கு பதிலாக, இனி ‘வரி ஆண்டு’ என்ற ஒரே சொல் பயன்படுத்தப்படும். வருமானம் ஈட்டப்பட்ட அதே ஆண்டிலேயே வரி செலுத்தப்படும் என்பதால், இந்த செயல்முறை எளிதாகவும், புரிந்துகொள்ளவும் எளிதாக இருக்கும்.

வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான பலன்கள்

இரட்டை வரிவிதிப்பு நீக்கம்: ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்திடமிருந்து டிவிடெண்ட் பெற்றால், அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும். இதன் மூலம் இரட்டை வரிவிதிப்பு தவிர்க்கப்படும்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வரிவிலக்கு: புதிய சட்டம், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை வரையறுத்து அவற்றுக்கு வரிவிலக்கு வழங்குகிறது.

ஓய்வூதியதாரர்களுக்கு வரிச் சலுகைகள்: பழைய தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் கிடைத்த அனைத்து வரிச் சலுகைகளும், புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும் தொடரும்.

முதலீட்டுக்கான சலுகைகள்: சவூதி அரேபியா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்காக வரி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

இந்த மாற்றங்கள் வருமான வரி செலுத்துவதை எளிதாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.