நீங்கள் கூகுள் ஜெமினி பயன்படுத்தும் பயனாளரா? இன்று முதல் உங்களுக்கு ஒரு ஆச்சரியமான புதிய அம்சம் அறிமுகம்..

கூகுளின் ஜெமினி செயலி, பயனர்களுக்கு சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களின் கடந்த கால உரையாடல்களில் இருந்து கற்றுக்கொள்ளும் ஒரு புதிய அம்சம், ‘தற்காலிக உரையாடல்கள்’ (Temporary Chats) என்ற அம்சம், மற்றும் உங்கள்…

gemini

கூகுளின் ஜெமினி செயலி, பயனர்களுக்கு சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களின் கடந்த கால உரையாடல்களில் இருந்து கற்றுக்கொள்ளும் ஒரு புதிய அம்சம், ‘தற்காலிக உரையாடல்கள்’ (Temporary Chats) என்ற அம்சம், மற்றும் உங்கள் தரவு மீது உங்களுக்கு அதிக கட்டுப்பாட்டை கொடுக்கும் புதிய அமைப்புகள் ஆகியவை தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய அம்சங்கள் ஆகும்.

ஜெமினி செயலியின் முக்கிய நோக்கம், கேள்விகளுக்கு பதிலளிப்பது மட்டுமே அல்லாமல், பயனரை உண்மையிலேயே புரிந்துகொண்டு பதிலளிக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு உதவியாளரை உருவாக்குவதே. இந்த இலக்கை நோக்கி, கூகுள் ஒரு புதிய அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஜெமினியை உங்கள் கடந்த கால உரையாடல்களிலிருந்து காலப்போக்கில் கற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.

இந்த வசதியை நீங்கள் பயன்படுத்தினால் நீங்கள் பகிர்ந்த முக்கிய விவரங்களையும் விருப்பங்களையும் ஜெமினி நினைவில் வைத்து கொள்ளும். இதன் விளைவாக, நீங்கள் ஏற்கனவே நன்கு அறிந்த ஒரு கூட்டாளியுடன் உரையாடுவது போல, மிகவும் இயல்பான மற்றும் பொருத்தமான உரையாடல்களை இது உருவாக்கும்.

எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட காமிக் புத்தகத்தின் கதாபாத்திரங்களின் வளர்ச்சி குறித்து ஜெமினியுடன் பேசியிருந்தால், “எனக்கு ஏற்ற ஒரு தனித்துவமான பிறந்தநாள் கொண்டாட்ட யோசனை வேண்டும்” என்று நீங்கள் கேட்கும்போது, அது உங்கள் விருப்பமான கதாபாத்திரத்தின் அடிப்படையில் கருப்பொருள் கொண்ட கொண்டாட்டம், சிறப்பு உணவு வகைகள் மற்றும் புகைப்படத்திற்கான அலங்காரங்கள் என பல யோசனைகளை வழங்கலாம்.

நீங்கள் ஏற்கனவே சில புத்தகங்களின் சுருக்கங்களை ஜெமினியிடம் கேட்டிருந்தால், “எனக்கு ஒரு நல்ல புத்தகத்தை பரிந்துரைக்க முடியுமா?” என்று நீங்கள் கேட்கும்போது, நீங்கள் முன்பு பேசிய அதே புத்தகங்களை அல்லது அதையொட்டிய புத்தகங்களை பரிந்துரைக்கலாம்.

ஜப்பானிய கலாச்சாரத்தில் உங்கள் ஆர்வம் குறித்து நீங்கள் ஜெமினியுடன் பேசியிருந்தால், “எனது ஆர்வங்களின் அடிப்படையில் புதிய உள்ளடக்க யோசனைகள் வேண்டும்” என்று நீங்கள் கேட்கும்போது, ஒரு புதிய ஜப்பானிய உணவு, ஒரு பாரம்பரிய கைவினை அல்லது ஒரு புதிய விளையாட்டை முயற்சிப்பது போன்ற வீடியோ யோசனைகளை ஜெமினி பரிந்துரைக்கலாம்.

இந்த அம்சம், ஜெமினி 2.5 Pro பயனர்களுக்கு இன்று முதல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில், ஜெமினி 2.5 Flash மாடலுக்கும் மற்ற நாடுகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.

சில நேரங்களில், ஜெமினியுடன் நீங்கள் மேற்கொள்ளும் ஒரு உரையாடல் எதிர்கால உரையாடல்களை பாதிக்கக் கூடாது என்று நீங்கள் நினைக்கலாம். உதாரணமாக, தனிப்பட்ட கேள்விகள் அல்லது வழக்கத்திற்கு மாறான யோசனைகளை விவாதிக்கும் போது இது தேவைப்படலாம். இந்த தருணங்களுக்காக, “தற்காலிக உரையாடல்” (Temporary Chat) என்ற ஒரு புதிய அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்துகிறது.

தற்காலிக உரையாடல்கள் உங்கள் சமீபத்திய சாட் பட்டியலில் அல்லது ஜெமினி செயலி செயல்பாட்டில் தோன்றாது. அவை உங்கள் அனுபவத்தை தனிப்பயனாக்கவோ அல்லது கூகுளின் AI மாடல்களுக்ப் பயிற்சி அளிக்கவோ பயன்படுத்தப்படாது.