அமெரிக்க வரிவிதிப்பால் நஷ்டமா? கவலை வேண்டாம், நிதி தருகிறோம்.. பிரேசில் அரசு அறிவிப்பு.. இந்தியாவும் நிதி கொடுக்குமா? 50% வரி விதித்தால் பயந்துவிடுவோமா? இந்தியாடா.. பிரேசில்டா..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது விதித்துள்ள கடுமையான வரிகள், உலக வர்த்தகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவின் இந்த வரி கொள்கைகளால் பாதிக்கப்பட்டு…

india brazil

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது விதித்துள்ள கடுமையான வரிகள், உலக வர்த்தகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவின் இந்த வரி கொள்கைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனினும், ஒவ்வொரு நாடும் இந்த நெருக்கடியை வெவ்வேறு விதமாக அணுகி வருகிறது.

அமெரிக்க வரிகளுக்கு ஈடுகொடுக்க $5.5 பில்லியன் நிதி ஒதுக்கீடு

அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவுவதற்காக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, $5.5 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவி தொகுப்பை அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பானது, பிரேசிலின் முக்கியமான ஏற்றுமதி பொருட்களான காபி மற்றும் இறைச்சி உள்ளிட்ட துறைகளை நேரடியாக பாதிக்கிறது. 2024ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு பிரேசில் செய்த ஏற்றுமதியில் 36% இந்த வரிவிதிப்பின் கீழ் வருகிறது. பிரேசில், அமெரிக்காவின் வரி கொள்கைகளைச் சமாளிக்க உள்நாட்டு நிறுவனங்களுக்கு நிதி ஆதரவு அளித்து, பொருளாதார பாதிப்பை குறைக்க முயற்சிக்கிறது.

அமெரிக்காவின் இந்த வரி விதிப்பானது இந்தியா மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்திய விவசாய பொருட்கள், மருந்துகள் மற்றும் இதர ஏற்றுமதி பொருட்களுக்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது. இருப்பினும், இந்திய அரசு இந்த பிரச்சினையை வித்தியாசமான அணுகுமுறையுடன் கையாள்கிறது.

விவசாயிகளுக்கு பாதுகாப்பு:

மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான், விவசாயிகளிடையே பேசும்போது, அமெரிக்காவின் வரி விதிப்பை கண்டு கவலைப்பட வேண்டாம். இது ஒரு சோதனைக்காலம். நாம் புதிய சந்தைகளை தேடுவோம். 140 கோடி மக்கள் கொண்ட இந்திய சந்தையே மிகப்பெரியது. நம் தயாரிப்புகள் இங்கேயே நுகரப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பொருட்களுக்கு மாற்றுத் தேடல்:

டிரம்ப் அரசின் வர்த்தக வரிகளை எதிர்கொள்ள, இந்தியா மற்ற நாடுகளுடன் புதிய வர்த்தக உறவுகளை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, வேளாண் பொருட்களுக்கான புதிய சந்தைகளை உருவாக்குவதிலும், உள்நாட்டு நுகர்வோரை ஊக்குவிப்பதிலும் அரசு கவனம் செலுத்துகிறது.

டிரம்பிற்கு பதிலடி:

பிரதமர் மோடி, “விவசாயிகளின் நலன்களுக்காக எவ்வளவு பெரிய விலை கொடுத்தாலும், அதில் இந்தியா சமரசம் செய்யாது” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது, டிரம்ப்பின் வர்த்தக போருக்கு எதிரான இந்தியாவின் துணிச்சலான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

மருத்துவத் துறையின் பார்வை: அமெரிக்க மக்களுக்குத்தான் பாதிப்பு

இந்த வரிக் கொள்கைகள் இந்தியாவிற்கு தற்காலிக இழப்பை ஏற்படுத்தினாலும், இதன் உண்மையான சுமை அமெரிக்க மக்களுக்கே விழும் என்று தொழில் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவிலிருந்துதான் பெரும்பாலான மருந்துகளும், சுகாதார பொருட்களும் அமெரிக்காவுக்கு செல்கின்றன. நாம் தற்காலிக இழப்பை ஏற்றாலும், அமெரிக்க மக்கள் இனிமேல் அதிக விலைக்கு மருந்துகளை வாங்க நேரிடும்” என்று ஃபார்மா துறையில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில் அமெரிக்காவின் வரி கொள்கைகளுக்கு எதிராக பிரேசில் நிதி உதவியை நாடியுள்ளது. ஆனால் இந்தியா நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிடாவிட்டாலும், விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்து வருகிறது. ஆனால் வெறும் நம்பிக்கை போதாது, வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பிரேசில் போல் நிதியுதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.