எங்க வீட்டில் 3 பேர் தான் இருக்கோம்.. 46 வாக்காளர்கள் இருப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டிய வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி.. என்ன தான் நடக்குது?

சமீபத்தில், இந்திய தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பவர்பாயிண்ட் விளக்கக்காட்சியில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிகளில் ஒன்று பெங்களூரு, மராத்தஹள்ளியில் உள்ள சௌடேஷ்வரி லே-அவுட்டில் வசித்து வரும் டி.எஸ்.கோபிநாத் என்பவருடைய வீடு.…

house

சமீபத்தில், இந்திய தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பவர்பாயிண்ட் விளக்கக்காட்சியில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிகளில் ஒன்று பெங்களூரு, மராத்தஹள்ளியில் உள்ள சௌடேஷ்வரி லே-அவுட்டில் வசித்து வரும் டி.எஸ்.கோபிநாத் என்பவருடைய வீடு. இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் ஒரு சாதாரண ஒரு அறை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
ஆனால், ஆகஸ்ட் 7 அன்று டெல்லியில் நடந்த ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தில் ராகுல் காந்தி, கோபிநாத்தின் வீட்டு முகவரியை தான் உதாரணமாகக் காட்டினார். தேர்தல் ஆணையத்தின் பதிவுகளின்படி, அந்த சிறிய வீட்டில் 46 வாக்காளர்கள் வாழ்ந்து வருவதாக ராகுல் தெரிவித்தார்.

இந்த செய்தி, கோபிநாத்தையும் அவரது குடும்பத்தினரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கோபிநாத், “இது அனைத்தும் மோசடி. நாங்கள் மூன்று பேர் மட்டுமே இங்கு வசிக்கிறோம்” என்று கூறினார். இந்த திடீர் ஊடக வெளிச்சம், அவரையும் அவரது மனைவியையும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோல், ராகுல் காந்தி குறிப்பிட்ட மற்றொரு முகவரியும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒயிட்ஃபீல்டில் உள்ள ஒரு முகவரியில், 68 வாக்காளர்கள் இருப்பதாகவும், தேர்தல் ஆணைய பதிவுகளை மேற்கோள்காட்டி ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இது ஒரு வணிக நிறுவனம் என்பதால், அதன் ஊழியர்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதே தொகுதியில் உள்ள மற்றொரு முகவரியில், ஒரு அறை வீட்டில் 80 வாக்காளர்கள் வசிப்பதாகவும் ராகுல் குறிப்பிட்டிருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன. மகாதேவபுரா சட்டமன்ற தொகுதி, பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இங்கு, தேர்தல் ஆணையத்தின் பதிவுகளில் உள்ள குளறுபடிகள், வாக்குப்பதிவு முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இத்தகைய நிகழ்வுகள், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும், ஜனநாயகத்தின் அடித்தளத்தையும் அசைப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.