இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை ஓவல் அலுவலகத்தில் சந்தித்தபோது, டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலம் குறித்து உற்சாகமாக இருந்தார். மோடி-டிரம்ப் இடையேயான தனிப்பட்ட நட்பு, ‘ஹௌடி மோடி’ மற்றும் குஜராத்தில் நடந்த மெகா நிகழ்வு போன்ற நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். வரும் ஆண்டுகளில், அமெரிக்கா-இந்தியா உறவை அதே உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று அவர் நம்பினார். ஆனால், நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியது.
டிரம்பின் திடீர் வரிவிதிப்பு
ஜூலை 30 அன்று, அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முடங்கிய நிலையில், ட்ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில், இந்திய இறக்குமதிகள் மீது 25% வரி விதிக்கப்போவதாக அறிவித்தார். எட்டு மணி நேரத்திற்குள், இந்தியாவின் நிரந்தர போட்டியாளரான பாகிஸ்தானுடன் 19% குறைந்த வரி விகிதத்தில் வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் நிலைமை மேலும் மோசமானது. இந்தியப் பொருளாதாரத்தை “செத்துப்போனது” என்று ட்ரம்ப் விமர்சித்ததுடன், இந்தியா மீதான வரிகள் “பெருமளவு” உயர்த்தப்படும் என்றும் எச்சரித்தார். புதன்கிழமை, அந்த வரி 50% ஆக உயர்த்தப்பட்டது, இது அமெரிக்கா உலகில் எந்த நாட்டிற்கும் விதித்த மிக உயர்ந்த வரி விகிதங்களில் ஒன்றாகும்.
அச்சுறுத்தலுக்குப் பின்னால் என்ன?
ட்ரம்ப்பின் சமூக வலைத்தள பதிவுகளின்படி, இந்த வரிவிதிப்புக்கு ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுதான் காரணம். ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்வதும், உக்ரைன் போருக்கு பயன்படுத்த ரஷ்யாவிற்கு உதிரிபாகங்கள் மற்றும் ஆயுதங்களை இந்திய நிறுவனங்கள் அனுப்பியதும் ட்ரம்ப்பின் கோபத்திற்கு முக்கிய காரணங்கள். ஆனால், சீனாவும் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்குகிறது, இருப்பினும் சீனாவுக்கு வரி சலுகைகள் அளிக்கப்பட்டன. ரஷ்யாவுக்கே 10% வரி மட்டுமே விதிக்கப்பட்டது. இது ட்ரம்ப்பின் நிலைப்பாட்டில் உள்ள முரண்பாட்டை காட்டுகிறது.
தனிப்பட்ட அதிருப்தி ஒரு காரணமா?
இந்தியா-ரஷ்யா உறவுக்கு அப்பாற்பட்டு, டிரம்ப்பின் தனிப்பட்ட கோபமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் மோதலை தீர்ப்பதில் ட்ரம்ப்பின் பங்களிப்பை இந்தியா அங்கீகரிக்க மறுத்ததால், அவர் அதிருப்தியடைந்தார். அமைதிக்கான நோபல் பரிசை பெற முயற்சிக்கும் ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டுவந்தது அதற்கான ஒரு காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்தியா அவரது பங்களிப்பை புறக்கணித்ததால், டிரம்ப் இந்தியாவை வேறு கோணத்தில் பார்க்க தொடங்கினார்.
இந்தியாவின் உள்நாட்டு அரசியல் சிக்கல்கள்
டிரம்பின் வரிவிதிப்பிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வழி, வர்த்தக ஒப்பந்தம் செய்வதுதான். ஆனால், அதற்கு மோடி உள்நாட்டு அரசியலில் ஒரு கடினமான சமநிலையை பேண வேண்டும். அமெரிக்காவின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, அமெரிக்க விவசாயப் பொருட்கள் மற்றும் பால் பொருட்களுக்கு இந்திய சந்தையைத் திறந்துவிடுவது. ஆனால், இந்தியாவின் விவசாய மற்றும் பால் தொழில்கள் மிகவும் உணர்வுபூர்வமானவை. இந்த துறைகளில் வர்த்தக தடைகளை தளர்த்தினால், அடுத்த தேர்தலில் தோல்வியடைவது நிச்சயம்.
இந்தியாவின் மொத்த தொழிலாளர்களில் சுமார் 45% விவசாயிகள் என்பதால், அவர்கள் பாஜகவுக்கு ஒரு முக்கிய வாக்காளர் குழுவாக உள்ளனர். 2020-ல் மோடி அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்கள் விவசாயிகள் வருமானத்தை குறைக்கும் என்று கூறி, வட இந்தியாவில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. 16 மாத போராட்டங்களுக்கு பிறகு, அரசு அந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், அமெரிக்காவின் பால் பொருட்கள், இந்துக்களின் கலாசார நம்பிக்கைகளுக்கு எதிரானவை என்பதால், அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மோடியின் உறுதியான நிலைப்பாடு
எதிர்க்கட்சிகள் ட்ரம்ப்பின் நடவடிக்கையை “பொருளாதார மிரட்டல்” என்று விமர்சித்தாலும், விவசாயம் மற்றும் பால் துறையில் மோடி அரசு விட்டு கொடுத்தால், அதை எதிர்ப்பாளர்கள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்துவார்கள். இந்த சவால்களுக்கு மத்தியில், மோடி தனது உறுதியான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார். ஆகஸ்ட் 2-ல் நடந்த ஒரு கூட்டத்தில், ட்ரம்ப்பின் பெயரை குறிப்பிடாமல், “இந்திய மக்களின் வியர்வையால் உருவாக்கப்பட்ட” உள்நாட்டு பொருட்களை வாங்குமாறு மக்களுக்கு மோடி அழைப்பு விடுத்தார்.
ஆனால், ட்ரம்ப்பின் அழுத்தம் காரணமாக, இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவதை படிப்படியாக குறைத்துக்கொள்ளும் என்று கூறப்பட்டாலும் இந்தியா அதை வெளிப்படையாக அறிவிக்காது, ஏனெனில் அது ட்ரம்ப்பிடம் சரணடைவது போல தோன்றும். அப்படியே ஒருவேளை குறைத்தாலும் இந்தியா மீதான டிரம்பின் கோபம் தணியாது. காரணம் தனக்கு கிடைப்பது போல் இருக்கும் நோபல் பரிசு கைநழுவினால் அதற்கு முழு காரணம் இந்தியாவாக தான் இருக்கும் என்பது டிரம்பின் எண்ணம். ஒருவேளை இந்தியா – பாகிஸ்தான் நிறுத்த டிரம்ப் உதவி செய்தார் என இந்தியா ஒப்புக்கொண்டால் டிரம்பின் கோபம் குறையலாம். ஆனால் அதற்கு மோடி பிரதமராக இருக்கும் வரை வாய்ப்பில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
