ஃபிக்சட் டெபாசிட் என்பது, ஓய்வு பெற்றவர்கள் முதல் பலருக்கும் நம்பகமான சேமிப்பு முறையாக இருந்து வருகிறது. பங்குச்சந்தை அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளை போல எந்தவிதமான ஆபத்துகளும் இல்லாமல், முதலீடு செய்யப்பட்ட பணத்திற்கு முழுமையான பாதுகாப்பு மற்றும் நிலையான வருமானத்தை பெறுவதால், மக்கள் இதை தேர்வு செய்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, சைபர் குற்றவாளிகள் ஃபிக்சட் டெபாசிட் வாடிக்கையாளர்களை குறிவைத்து மோசடி செய்து பணத்தை திருடி வருகின்றனர். இந்த சிக்கலைத் தீர்க்கும் விதமாக, ஆக்ஸிஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக ‘லாக் எஃப்டி’ (Lock FD) என்ற புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘லாக் எஃப்டி’ எப்படி வேலை செய்கிறது?
இந்த வசதி மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் ஃபிக்சட் டெபாசிட்களை பாதுகாப்பாக ‘லாக்’ செய்யலாம்.
டிஜிட்டல் வழியாக எடுக்க முடியாது:
ஒருமுறை இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டால், வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் வழிகளில், அதாவது மொபைல் வங்கி அல்லது இணைய வங்கி மூலம், ஃபிக்சட் டெபாசிட்டை முன்கூட்டியே முடித்து பணத்தை எடுக்க முடியாது. இது வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு ஒரு கூடுதல் பாதுகாப்பு வளையத்தை உருவாக்குகிறது.
நேரடி சரிபார்ப்பு அவசியம்:
இந்த அம்சத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள், ஒருவேளை முன்கூட்டியே பணத்தை எடுக்க விரும்பினால், நேரடியாக வங்கி கிளைக்குத்தான் செல்ல வேண்டும். அங்கே, அவர்கள் அடையாள ஆவணங்களை சமர்ப்பித்து, வங்கி அதிகாரிகளின் அங்கீகாரத்திற்கு பிறகுதான் பணத்தை எடுக்க முடியும்.
மோசடிகளைத் தடுப்பதே முக்கிய நோக்கம்
சைபர் குற்றவாளிகள், திருடப்பட்ட உள்நுழைவு விவரங்கள் அல்லது சிம் ஸ்வாப் மோசடிகள் மூலம், வாடிக்கையாளர்களின் ஆன்லைன் வங்கி கணக்குகளில் அத்துமீறி நுழைந்து, முதிர்வுக்கு முன்னரே ஃபிக்சட் டெபாசிட் பணத்தை எடுத்து, தங்கள் கணக்குகளுக்கு மாற்றிக்கொள்கின்றனர். இந்த வகையிலான டிஜிட்டல் மோசடிகளைத் தடுப்பதற்காகவே ‘லாக் எஃப்டி’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
‘லாக் எஃப்டி’யை செயல்படுத்துவது எப்படி?
வாடிக்கையாளர்கள் இந்த வசதியை இரண்டு வழிகளில் செயல்படுத்தலாம்:
மொபைல் செயலி: ஆக்ஸிஸ் வங்கியின் மொபைல் செயலிக்குச் சென்று, ஃபிக்சட் டெபாசிட் விவரங்களுக்குள் நுழைந்து, ‘லாக் எஃப்டி’ விருப்பத்தை இயக்கி கொள்ளலாம்.
வங்கி கிளை: நேரடியாக வங்கி கிளைக்குச் சென்று, இந்த வசதியைச் செயல்படுத்தும்படி கோரிக்கை விடுத்து விண்ணப்பம் அளிக்கலாம்.
இந்த புதிய அம்சம், ஃபிக்சட் டெபாசிட் வாடிக்கையாளர்களின் பணத்திற்கு கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இணையவழி மோசடிகளில் இருந்து அவர்களை காக்க உதவும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
