ஆதாரம் கொடுங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள்.. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..!

2024 மக்களவை தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் மோசடி நடந்ததாக காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு முறையான ஆதாரத்தை வழங்க வேண்டும்…

rahul

2024 மக்களவை தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் மோசடி நடந்ததாக காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு முறையான ஆதாரத்தை வழங்க வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகள் உண்மையானவை என நம்பினால், பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், அவர் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திடத் தவறினால், அவர் தனது ஆதாரங்களை நம்பவில்லை என்று அர்த்தம் என்றும், அத்தகைய சூழ்நிலையில் அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகள், போலி வாக்காளர் பட்டியல் குறித்த ஆதாரங்கள் இருந்தால், அவற்றை உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரியிருந்தனர். இதையே தற்போது தலைமை தேர்தல் ஆணையமும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2024 தேர்தல் முடிவுகளை திருத்துவதற்காக தேர்தல் ஆணையமும், பாஜகவும் கூட்டு சேர்ந்துள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் திருடப்பட்டுள்ளதாகவும், 40,009 போலி வாக்காளர்கள் இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த கண்டனத்திற்கு ராகுல் காந்தி என்ன பதில் அளிக்க போகிறார் என்பதை அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.