ஆகஸ்ட் 10 முதல் மேலும் 3 வந்தே பாரத் ரயில்கள்.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.. முழு விவரங்கள்..!

ஏற்கனவே இந்தியாவில் இயங்கி கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப்பெரிய ஆதரவு பயணிகள் மத்தியில் கிடைத்துள்ள நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி மூன்று புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இந்திய ரயில்வே…

vandhe bharath

ஏற்கனவே இந்தியாவில் இயங்கி கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப்பெரிய ஆதரவு பயணிகள் மத்தியில் கிடைத்துள்ள நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி மூன்று புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இந்திய ரயில்வே தொடங்க உள்ளது. இந்த புதிய அதிவேக ரயில் சேவைகள் முக்கிய நகரங்களை இணைத்து, பயணிகளுக்கு வேகமான மற்றும் வசதியான பயணத்தை வழங்கும். பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இந்த புதிய ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். அந்த மூன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

1. பெங்களூரு – பெலகாவி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

பெங்களூரு மற்றும் பெலகாவி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை, கர்நாடக மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. இந்த புதிய சேவை பயண நேரத்தை குறைத்து, மாநில தலைநகருக்கும் வடக்கு பகுதிக்கும் இடையேயான இணைப்பை மேம்படுத்தும்.

இந்த ரயில் ஆகஸ்ட் 10 அன்று காலை 11:15 மணிக்கு KSR பெங்களூரில் இருந்து முதல் சேவை புறப்படும், வழக்கமான சேவை ஆகஸ்ட் 11 அன்று தொடங்கும். ரயில் எண். 26751: பெலகாவியில் இருந்து காலை 5:20 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1:50 மணிக்கு பெங்களூரு வந்தடையும். மறு மார்க்கத்தில் ரயில் எண். 26752: பெங்களூருவில் இருந்து பிற்பகல் 2:20 மணிக்கு புறப்பட்டு, இரவு 10:40 மணிக்கு பெலகாவி வந்தடையும். இந்த ரயில் துமக்கூரு, தாவணகெரே, ஹாவேரி, ஹூப்பள்ளி மற்றும் தார்வாட் ஆகிய இடங்களில் நிற்கும்.

2. அஜ்னி (நாக்பூர்) – புனே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் மற்றும் புனே நகரங்களை இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இணைக்கும். இது நாக்பூரிலிருந்து தொடங்கப்படும் மூன்றாவது வந்தே பாரத் ரயில் ஆகும். இதற்கு முன்பு நாக்பூர்-பிலாஸ்பூர் மற்றும் நாக்பூர்-செகந்திராபாத் வழித்தடங்களில் ரயில்கள் தொடங்கப்பட்டன. ரயில் எண். 26102: அஜ்னியில் இருந்து காலை 9:50 மணிக்கு புறப்பட்டு, இரவு 9:50 மணிக்கு புனே வந்தடையும். மறு மார்க்கத்தில் ரயில் எண். 26101: புனேவில் இருந்து காலை 6:25 மணிக்கு புறப்பட்டு, மாலை 6:25 மணிக்கு அஜ்னி வந்தடையும். இந்த ரயில் வர்தா, பட்னேரா, அகோலா, புசாவல், ஜல்கான், மன்மாத், கோபர்கான், அகமதுநகர் மற்றும் தௌண்ட் சர்த் லைன் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் நிறுத்தப்படும்.

3. கத்ரா – அமிர்தசரஸ் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

வட இந்தியாவில் உள்ள இரண்டு முக்கியமான புனித தலங்களான கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மற்றும் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் ஆகிய இடங்களுக்கு இந்த புதிய ரயில் பயணம் செய்யும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். ரயில் எண். 26406: ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ராவிலிருந்து காலை 6:40 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 12:20 மணிக்கு அமிர்தசரஸ் வந்தடையும். மறுமார்க்கத்தில் ரயில் எண். 26405: அமிர்தசரஸிலிருந்து மாலை 4:25 மணிக்கு புறப்பட்டு, இரவு 10:00 மணிக்கு கத்ரா வந்தடையும். இந்த ரயில் ஜம்மு, பதான்கோட் கண்டோன்மென்ட், ஜலந்தர் நகரம் மற்றும் பியாஸ் ஆகிய இடங்களில் நிற்கும்.