அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பல சந்தர்ப்பங்களில் இந்தியாவை “நண்பன்” என்று அங்கீகரித்த போதிலும், ஏற்கனவே 25% இந்திய ஏற்றுமதிகள் வரிவிதித்த அவர் நேற்று மேலும் 25% கூடுதல் வரியை விதித்தார். இதன் மூலம், ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது விதிக்கப்பட்ட மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும், ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா நிறுத்தவில்லை என்பது தான் அமெரிக்காவுக்கு மேலும் கோபத்தை அதிகரித்துள்ளது.
ஒரு காலத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்காவே இந்தியாவை ஊக்கப்படுத்தியது. தற்போது, உலக அளவில் ரஷ்ய எண்ணெயை அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கெப்லெர் (Kpler) என்ற நிறுவனத்தின் தரவுகளின்படி, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஒரு நாளைக்கு சுமார் 3.35 மில்லியன் பேரல்கள் ஆகும். இதில், இந்தியா சுமார் 1.7 மில்லியன் பேரல்களையும், சீனா 1.1 மில்லியன் பேரல்களையும் வாங்குகின்றன. எனினும், சீனா மீது விதிக்கப்பட்ட வரி 30% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, ரஷ்ய எண்ணெயின் இறக்குமதியை கணிசமாகக் குறைத்தால், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மாற்று எண்ணெயை தேட வேண்டியிருக்கும். இதன் விளைவாக, 2022-க்கு முன்னர் இருந்ததை போல, மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளையே இந்தியா நம்பியிருக்க நேரிடும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின்படி அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக, ரஷ்யா உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது. ரஷ்யா ஒரு நாளைக்கு சுமார் 11 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தி செய்கிறது.
இந்திய பெட்ரோலியத் துறையின் தகவலின்படி, சந்தையிலிருந்து ரஷ்ய எண்ணெயின் விநியோகம் நீக்கப்பட்டால், கச்சா எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயரும்.
கடந்த மாதம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஒரு ஊடகத்திடம் பேசும்போது, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 130 டாலர் வரை உயரும் என்று தெரிவித்தார்.
மேலும், ரஷ்ய எண்ணெயை விலை தடையின் கீழ் வாங்குமாறு அமெரிக்காவே இந்தியாவிடம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததில் இருந்து, ஐரோப்பிய யூனியனால் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு ஒரு விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்த முடிவை வெளியுறவுத்துறை அமைச்சகம் “நியாயமற்றது, நியாயப்படுத்த முடியாதது மற்றும் விவேகமற்றது” என்று கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தியாவின் எரிசக்தி கொள்முதல், அதன் இறையாண்மை நலன்கள் மற்றும் உலகளாவிய சந்தை இயக்கவியலுக்கு ஏற்பவே உள்ளது என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், அதன்பின் மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படும், அதுமட்டுமின்றி ரஷ்யாவின் நீண்டகால நட்பையும் இழக்க வேண்டிய நிலை வரும் என்பதால் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்படாமல் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
