கார்ல் டான்ஸ்லர் மற்றும் எலெனா டி ஹயோஸ் ஆகியோரின் கதை, வழக்கமான எல்லைகளை தாண்டி சென்ற ஒரு விசித்திரமான வெறித்தனத்தை கொண்டது. இது கொலை அல்லது உயிருள்ள ஒருவரை பின்தொடர்வது பற்றியது அல்ல. மாறாக, பல வருடங்களாக ஒரு இறந்த உடலுடன் வாழ்ந்த ஒரு மனிதனின் கதை.
1931-ல், 22 வயது எலெனா டி ஹயோஸ் என்ற இளம்பெண் ஃபுளோரிடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் காசநோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அப்போது, கார்ல் டான்ஸ்லர் என்பவர் அங்கிருந்த ஒரு ரேடியாலஜி டெக்னீஷியன் தன்னால் எலெனாவை குணப்படுத்த முடியும் என்று நம்பினார். அவர் விசித்திரமான சிகிச்சைகளை மேற்கொண்டார். தன் காதலை எலெனாவிடம் வெளிப்படுத்தினார், ஆனால் எலெனா அந்த காதலை ஏற்கும் நிலையில் இல்லை. இந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக, அக்டோபர் 25, 1931 அன்று எலெனா இறந்துவிட்டார்.
எலெனாவின் இறுதிச்சடங்கிற்கான செலவை டான்ஸ்லர் ஏற்றுக்கொண்டதுடன், ஒரு பெரிய கல்லறையையும் கட்டினார். அதற்கான சாவி அவரிடம் மட்டுமே இருந்தது. இரண்டு வருடங்களாக, அவர் ஒவ்வொரு இரவும் எலெனாவின் கல்லறைக்கு சென்று, பரிசுகளை வைத்துவிட்டு வருவார்.
1940-ல், டான்ஸ்லர் எலெனாவின் உடலுடன் வாழ்ந்து வருவதாக வதந்திகள் பரவியது. எலெனாவின் சகோதரி அவரை சந்தித்தபோது, அது உண்மை என்று கண்டறிந்தார். டான்ஸ்லர், 1933-ல் எலெனாவின் உடலை கல்லறையிலிருந்து எடுத்து வந்து, கோட் ஹேங்கர்கள், மெழுகு, கண்ணாடி கண்கள் மற்றும் வாசனை திரவியங்களை பயன்படுத்தி உடலை பதப்படுத்தியுள்ளார்.
அவர் எலெனாவின் முகத்தை பிளாஸ்டர் மூலம் புனரமைத்து, அவரது உண்மையான முடியை கொண்டு ஒரு விக் தயாரித்துள்ளார். அந்த உடல் அலங்கரிக்கப்பட்டு, நகைகள் அணிவிக்கப்பட்டு, அவரது படுக்கையில் வைக்கப்பட்டுள்ளது.
எலெனா உடலை இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தபோது, அந்த உடலில் ஒரு ரப்பர் குழாய் பொருத்தப்பட்டிருந்ததாகவும், அது பாலியல் செயல்பாடுகளுக்காக செயற்கையான பெண்ணுறுப்பாக இருக்கலாம் என்றும் கூறினர்.
கல்லறையில் இருந்து உடலை திருடி, அந்த உடலை அவர் 7 வருடங்களாக பாலியல் உறவுக்கு பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றத்திற்காக டான்ஸ்லர் கைது செய்யப்பட்டாலும், நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. ஆச்சரியமாக, பொதுமக்கள் அவர் மீது அனுதாபம் காட்டினர். எலெனாவின் உடல் ஒரு சவ அடக்க இல்லத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அங்கு 6,000 பேர் அதை பார்க்க வந்தனர். பின்னர், அவரது உடல் மீண்டும் அடையாளம் தெரியாத ஒரு கல்லறையில் புதைக்கப்பட்டது.
கார்ல் டான்ஸ்லர், 1877-ல் ஆஸ்திரியாவில் பிறந்தவர். அவர் திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளை பெற்றிருந்தபோதிலும், அவர்களை கைவிட்டார். ஒரு கனவில் தனது உண்மையான காதலை கண்டதாகவும், அந்த கருப்பு முடி கொண்ட பெண் எலெனாதான் என்றும் அவர் நம்பினார். அவர் 1952-ல் இறந்தபோது, எலெனாவின் அளவுள்ள ஒரு பொம்மை அவரது அருகில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விசித்திரமான வழக்கு, இதுவரை சொல்லப்பட்ட காதல் கதைகளில் மிக விசித்திரமானது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
