நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியபோது, அது விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் கட்சிகளை போலவே, அதிகபட்சம் 5% வாக்குகளை மட்டுமே பெறும் என்று விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த அக்கட்சியின் முதல் மாநாட்டுக்கு பிறகு, விஜய்யின் வாக்கு வங்கி கணிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
விக்கிரவாண்டி மாநாட்டிற்கு பின் விஜய்க்கு 10% வரை வாக்குகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. அதன்பின்னர் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் போன்றவர்கள், விஜய்க்கு ஏற்கெனவே 15% வாக்குகள் இருப்பதாக தெரிவித்தனர். இதை அனுபவமுள்ள பல அரசியல் விமர்சகர்களும் ஒப்புக்கொண்டனர்.
தற்போது வெளிவந்திருக்கும் கருத்துக்கணிப்புகளின்படி, விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு 20% வாக்குகள் வரை இருப்பதாகவும், அவர் வரும் மாதங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டால், அது 30% ஆக உயரவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வரவிருக்கும் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., நாதக மற்றும் தவெக ஆகிய நான்கு கூட்டணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், ஒரு கட்சி 30% வாக்குகளை பெற்றால், ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது அல்லது குறைந்தது 100 சட்டமன்ற தொகுதிகளை வெல்ல வாய்ப்பு உண்டு என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
விஜய்யின் இந்த புதிய எழுச்சி, மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒரு சவாலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவர் இந்த நிலையை எட்டுவாரா, மக்களை தன் பக்கம் ஈர்ப்பாரா, மற்ற கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த கணிப்புகள், தமிழக அரசியல் களம் அடுத்த சில மாதங்களில் கடுமையான போட்டியை சந்திக்கப் போகிறது என்பதை காட்டுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
