சமீபத்தில் அ.தி.மு.க.வின் முக்கிய இஸ்லாமிய முகங்களில் ஒருவரான அன்வர் ராஜா, தி.மு.க.வில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை தொடர்ந்து, அ.தி.மு.க.விலிருந்து இன்னொரு முக்கிய புள்ளியும் விரைவில் தி.மு.க.வில் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க.வில் அமைப்பு செயலாளராகவும், அடிப்படை உறுப்பினராகவும் நீண்டகாலம் அன்வர் ராஜா செயல்பட்டார். 2001-ஆம் ஆண்டு ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பணியாற்றினார். 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
இந்த நிலையில் அன்வர் ராஜாவின் விலகலுக்கு பிறகு, அ.தி.மு.க.விலிருந்து மற்றொரு முக்கியப் பிரமுகர் தி.மு.க.வில் இணையப் போவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.அவர் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்று சிலர் கூற, வேறு சிலர் அவர் சென்னையை சேர்ந்தவர் என்று தெரிவிக்கின்றனர். சுமார் 5,000 ஆதரவாளர்களுடன் அவர் தி.மு.க.வில் இணையப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு முன்னர் அரசியல் தலைவர்கள் கட்சிகளை மாற்றுவது வழக்கமான ஒன்றுதான் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வெற்றி பெறக்கூடிய கட்சிக்கு ஆதரவளிப்பது அல்லது ஆளும் கட்சியுடன் இணைவது போன்ற நிகழ்வுகள் அரசியலில் இயல்பான ஒன்று என அவர்கள் குறிப்பிடுகின்றனர். தி.மு.க.வில் இணையவிருக்கும் அந்த அடுத்த முக்கிய பிரமுகர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
