இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் இன்று. இங்கிலாந்து அணி வெற்றி பெற 35 ரன்கள் தேவை, இந்தியாவுக்கு 4 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில், முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த தொடர் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
எதிர்பாராத ஒரு முடிவு! ஒவ்வொரு போட்டியிலும், அனுபவமின்மை காரணமாக இரு அணிகளும் சில அடிப்படை தவறுகளை செய்துள்ளன. இன்று இங்கிலாந்து இந்த நிலையில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
இந்தியா ஒரே ஒரு இடத்தில் தோல்வியடைந்துள்ளது. இந்த ஆடுகளத்தில், 374 ரன்கள் என்பது பெரிய இலக்கு. ஆனால், பந்துவீச்சில் அழுத்தத்தை கொடுக்கும் கலையை இந்தியா இழந்துவிட்டது. இன்றைய டி20 யுகத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதே முக்கியம் என்ற மனநிலையில், விக்கெட்டுகளை எடுப்பதற்குரிய அழுத்தத்தை உருவாக்கவில்லை.
சுழற்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தப்படாதது முக்கிய தவறு. இந்தத் தொடரில், ஆடுகளத்திலும், அதற்கு வெளியிலும் நமது உத்திகள் மற்றும் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு குறைவாக இருந்ததாக நான் உணர்கிறேன். அதனால்தான் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது, இந்தியா பின்தங்கியுள்ளது. நாம் கூர்மையாக இல்லை.
சுப்மன் கில் ஒரு சிறந்த கேப்டனாக வருவார் என்று நான் நினைக்கிறேன். அவர் கற்றுக்கொள்வார். ஆனால், சில சமயங்களில், சுழற்பந்து வீச்சை நீங்கள் சிறப்பாக விளையாட முடியும் என்று நினைக்கும்போது, நீங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை தாக்குதலுக்கு கொண்டு வர மாட்டீர்கள். இந்த சூழ்நிலைகளில் சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு வர வாய்ப்பை தவறவிட்டால் தோல்வி தான் கிடைக்கும்.
ஹாரி புரூக் அடித்து ஆட தொடங்கிய பிறகு ரன்களை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு வந்திருக்கலாம். மறுமுனையில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை வீச வைத்திருக்கலாம். இதையெல்லாம் மனதில் கொண்டு, வாஷிங்டன் சுந்தரை முன்னதாகவே களமிறக்கியிருக்கலாம். இத்தகைய தவறுகளை தவிர்ப்பது என்பது முக்கியமான ஒன்று. வெளியிலிருந்து ஆலோசனை, மைதானத்திற்கு சென்றதா என்று நமக்கு தெரியாது. டிரஸ்ஸிங் ரூம் பேச்சுகளும் நமக்கு தெரியாது. ஆனால், இப்போதைய காலத்தில், இத்தகைய தவறுகளை நிச்சயமாக தவிர்க்க முடியும்” என்று அஸ்வின் தனது கருத்தை தெரிவித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
