பால், முட்டை, சிக்கன், கேஸ், மின்சாரம்.. எல்லாமே இலவசம்.. ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் வாழ்க்கை நடத்தும் மும்பை தம்பதி.. எப்படி சாத்தியம்?

உலகம் முழுவதும் அன்றாட செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், மும்பையை சேர்ந்த தம்பதி ஒருவர், ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் வாழும் தனித்துவமான வாழ்க்கை பாணியால் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இந்த…

couple

உலகம் முழுவதும் அன்றாட செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், மும்பையை சேர்ந்த தம்பதி ஒருவர், ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் வாழும் தனித்துவமான வாழ்க்கை பாணியால் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இந்த வாழ்க்கை முறை, ஒரு நிறைவான வாழ்க்கை என்றால் என்ன என்பதை பற்றி பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

காவ்யா மற்றும் சங்கீத் என்ற அந்த தம்பதியினர், ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில், தங்கள் சேமிப்பில் 60 சதவீதத்தை முதலீடு செய்து இந்த வீட்டை கட்டியுள்ளனர். “இவ்வளவு பணம் செலவழித்து, இப்படி ஒரு வீட்டை உருவாக்குவது முட்டாள்தனம் என்று பலர் சொன்னார்கள். ஆனால், எங்கள் வீட்டில் வாழ இப்போது எங்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு இல்லை என காவ்யா கூறுகிறார்.

இவர்களது வீடு வெறும் ஒரு தங்குமிடம் மட்டுமல்ல, அது ஒரு முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பாகும். அவர்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை தாங்களே பயிரிடுகிறார்கள். ஒரு சிறிய குளம் அமைத்து மீன் வளர்க்கிறார்கள். புரதச்சத்துக்காக முட்டையும், பாலுக்காக மாடுகளையும் வளர்க்கிறார்கள்.

சமையலுக்குத் தேவையான எரிபொருள், வீட்டிலேயே அமைக்கப்பட்டுள்ள பயோகாஸ் ஆலையில் இருந்து கிடைக்கிறது. வீட்டின் கழிவுகளும் அங்கேயே பதப்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம், உணவு, எரிபொருள் போன்றவற்றுக்கு எந்தவிதமான செலவும் இன்றி, நிம்மதியான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

வீட்டின் மின்சாரத் தேவை மற்றும் விவசாயத்திற்கான நீர் பாசனத் தேவை ஆகியவற்றை சூரிய ஒளி தகடுகள் பூர்த்தி செய்கின்றன. தங்களுக்குத் தேவையான உணவு பொருட்கள் தவிர, கூடுதலாக உற்பத்தி செய்யும் காளான், தேன் போன்றவற்றையும் விற்று பணம் சம்பாதிக்கின்றனர்.

காவ்யா தனது பதிவில், “அதிக பணம் சம்பாதிப்பதை விட, மன அமைதியுடன் வாழ்வதே முக்கியம். இதுபோல இயற்கையுடன் இணைந்து வாழும் ஒரு வாழ்க்கை முறை, நவீன உலகில் ஒரு நிலையான ஓய்வூதியத் திட்டமாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தம்பதியினர் இந்தியாவில் ஒரு லட்சம் மரங்களை நடுவதற்கு இலக்கு வைத்து, அதற்குண்டான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவுக்கு 3 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. பலரும் இந்த தம்பதியின் வாழ்க்கைத் தரம், மன அமைதி மற்றும் மகிழ்ச்சியைப் பாராட்டி வருகின்றனர். “இதுதான் உண்மையான சொகுசு வாழ்க்கை” என்றும், “இது தற்செயலாக நடக்கவில்லை, சரியான திட்டமிடல் மற்றும் முயற்சிகளால் உருவானது” என்றும் பல பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

https://www.instagram.com/reel/DMSpMKnpbUp/