பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு திருமண ஊர்வலம் வழக்கத்திற்கு மாறான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. மணமகன் தேவ்முனி குமார், வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள் காரணமாக, தனது மணப்பெண்ணின் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தார்.
வழக்கமாக ஆடம்பர காரில் செல்ல வேண்டிய தேவ்முனி, அதற்கு பதிலாக படகு மற்றும் ஈ-ரிக்ஷா மூலம் கட்டகோஷ் கிராமத்தில் உள்ள மணப்பெண்ணின் வீட்டை அடைந்தார். அவருடன் சுமார் 25 முதல் 30 நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சென்றனர். சாதாரணமாக, மணமகன் 35 கிலோமீட்டர் தூரம் உள்ள நேரடி பாதையில் சென்றிருக்க வேண்டும். ஆனால் கங்கை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், பயணம் மிகவும் நீண்டதாகவும் கடினமாகவும் மாறியது.
தேவ்முனியின் தந்தை ராம் தேவ் மண்டல் இதுகுறித்து கூறியபோது, “திருமண தேதி ஒரு மாதத்திற்கு முன்பே நிச்சயிக்கப்பட்டது. ஊர்வலம் கட்டிகார் மாவட்டத்தின் மனிஹாரி தொகுதியில் உள்ள கட்டகோஷ் கிராமத்தில் இருக்கும் ராமச்சந்திர சௌத்ரியின் வீட்டிற்கு செல்ல வேண்டும். ஆனால், எங்களது பகாபூர் கிராமம் அனைத்து பக்கங்களிலும் வெள்ள நீரால் சூழப்பட்டிருந்தது. நாங்கள் 30 பேர் படகில் செல்வதை தவிர வேறு வழியில்லை” என்றார்.
மணமகனுக்கு சொந்தமான அலங்கரிக்கப்பட்ட ஸ்கார்பியோ காரில் பயணம் தொடங்கியதாகவும், ஆனால் வெள்ளம் காரணமாக அவர்களால் நீண்ட தூரம் செல்ல முடியவில்லை என்றும் தேவ்முனி குமார் தெரிவித்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு, மணமகள் வீட்டார் ஆற்றுக்கு செல்லும் கரை வரை நடந்து சென்று, அங்கிருந்து படகில் பயணிக்க வேண்டியிருந்தது. முதலில் வானிலை தெளிவாக இருந்தது, ஆனால் படகில் ஏறியவுடன் மழை பெய்ய தொடங்கியது. மணப்பெண்ணின் வீட்டை அடைந்தபோது, அனைவரும் மழையில் நனைந்துவிட்டனர். பகலில் வீட்டை விட்டு புறப்பட்டாலும், அவர்கள் இரவு 8 மணிக்கு தான் மணப்பெண்ணின் கிராமத்தை அடைந்தனர்.
படகில் பயணம் செய்த பிறகும், அவர்களின் பயணம் முடியவில்லை. அவர்கள் இன்னும் சில கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது. அதன் பிறகுதான் ஈ-ரிக்ஷாவில் ஏறி, இறுதியாக திருமண மண்டபத்தை அடைந்தனர். “பேண்டு வாத்தியங்கள் முழங்க, ஆடம்பரமாக ஊர்வலம் செல்ல வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறாமல் போய்விட்டது” என்று மணமகன் வருத்தத்துடன் கூறினார்.
ஆனாலும் எந்த வெள்ளமும் என் திருமணத்தை நிறுத்த முடியாது, படகில் மிதந்து சென்றாவது என்னவளை கைபிடிப்பேன் என்று உறுதியாக இருந்தேன் என்று மணமகன் கூறியது தான் சுவாரஸ்யம்..
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
