கமல்ஹாசனின் ‘நீயா’ படம் போல் ஒரு உண்மை சம்பவம்.. ஆண் பாம்பை கொன்றவர்களை பழிவாங்க வந்த பெண் பாம்பு.. கிராம மக்கள் அதிர்ச்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகஞ்ச் மாவட்டத்தில், நாகபஞ்சமி தினமான ஜூலை 29 அன்று, ஒரு பெண் நாகப்பாம்பு வீட்டுக்குள் நுழைந்ததால் கிராம மக்கள் இரவு முழுவதும் பீதியில் உறைந்துபோயினர். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு…

snake

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகஞ்ச் மாவட்டத்தில், நாகபஞ்சமி தினமான ஜூலை 29 அன்று, ஒரு பெண் நாகப்பாம்பு வீட்டுக்குள் நுழைந்ததால் கிராம மக்கள் இரவு முழுவதும் பீதியில் உறைந்துபோயினர். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு அதே கிராமத்தில் இறந்த ஒரு ஆண் நாகப்பாம்பின் மரணத்திற்கு பழிவாங்குவதற்காகவே அந்த பெண் பாம்பு வந்ததாக கிராம மக்கள் நம்பியதால், இந்தப் பதற்றம் அதிகரித்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள அலிகஞ்ச் பகுதியில் உள்ள சரௌடியா கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரவேஷ் தீட்சித் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்த அந்த பெண் நாகப்பாம்பு, இரவு முழுவதும் அங்கேயே இருந்து தொடர்ந்து சீறியதாக தெரிகிறது. இந்த சம்பவம் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல என்று கூறிய கிராம மக்கள், தங்கள் நீண்டகால நம்பிக்கைகளின் அடிப்படையில், இது பழிவாங்கும் நோக்கில் நடந்தது என்று நம்பினர்.

சுமார் 15 நாட்களுக்கு முன்பு தீட்சித்தின் வீட்டில் ஒரு ஆண் நாகப்பாம்பு தவறுதலாக கொல்லப்பட்டது. இதன் காரணமாக, நாகபஞ்சமி அன்று, அந்த பெண் நாகப்பாம்பு பழிவாங்கவே வந்ததாக அவர்கள் கருதினர். சாவன் மாதத்தில் நாகப்பாம்புகள் புனிதமானவையாக கருதப்படும் இந்தியாவின் பல பகுதிகளில் இது போன்ற நம்பிக்கைகள் வேரூன்றியுள்ளன. ஒரு பாம்பு கொல்லப்பட்டால், அதன் துணை பாம்பு பழிவாங்க வரும் என்று கிராமப்புற கதைகளில் அடிக்கடி கூறப்படுவதுண்டு. கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடித்த ‘நீயா’ படத்தின் கதையும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நம்பிக்கையின் காரணமாக, கிராம மக்கள் பெரும் பயத்தில் ஆழ்ந்தனர். தீட்சித்தின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல், பல அண்டை வீட்டாரும் இரவு முழுவதும் அச்சத்துடன் கழித்தனர்.

கிராம மக்களின் அச்சம் தொடர்ந்ததால், அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை பத்திரமாக பிடிக்க முயன்றனர். அந்த பாம்பு ஆக்ரோஷமாக இருந்ததாலும், படம் எடுத்து தொடர்ந்து சீறியதாலும், அதை பிடிப்பதற்கு மிகுந்த சிரமப்பட்டதாக தெரிகிறது.

வனத்துறை அதிகாரிகள் பாம்பை பிடிக்க முயற்சிக்கும் காணொளியும் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், பாம்பு படம் எடுத்து எதிர்ப்பது தெளிவாக தெரிகிறது. இறுதியில், குழுவினர் பாம்புக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காமல் அதை பிடித்து, பாதுகாப்பாக அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகே கிராம மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மழைக்காலங்களில் பாம்புகள் உணவு தேடி வீடுகளுக்குள் வருவது வழக்கம். இந்த சூழலில், அந்த பாம்பு பசியுடன் இருந்திருக்கலாம் அல்லது நீண்ட நேரம் வேட்டையாடாமல் இருந்திருக்கலாம். அதனால்தான் அது ஒரே இடத்தில் தங்கியிருந்தது என்றும் பழிவாங்கும் கதையெல்லாம் நாங்கள் நம்ப தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.