மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மணமகளின் தோழி ஒருவர் ‘சரியான உடை அணியவில்லை’ என கூறி திருமண மண்டபத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணமகளின் தோழியான ஆலிஸ் பிரவுன் இந்த சம்பவத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஆலிஸ் பிரவுன் தனது கணவருடன் திருமணத்திற்கு சென்றபோது, மணமகள் அவரை தனியாக அழைத்து, “இந்த திருமணத்திற்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட டிரஸ் கோட் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் தகவல் அனுப்பியிருந்தோம். ஆனால் அதை மீறி நீங்கள் உடை அணிந்து வந்திருக்கிறீர்கள். எனவே நீங்கள் இந்த திருமணத்திலிருந்து வெளியேறலாம்,” என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு என்ன டிரஸ் கோடில் வரவேண்டும் என்பது குறித்த தகவல் தங்களுக்கு வரவில்லை என்று ஆலிஸ் கூறினார். மேலும், இந்த திருமணத்திற்காகத் தாங்கள் பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து வந்திருப்பதாகவும் அவர் விளக்கினார்.
இதை அடுத்து, மணமகள், “வழக்கமாக இதுபோன்று ஆடை குறியீட்டை பின்பற்றவில்லை என்றால் வெளியே அனுப்பிவிடுவார்கள். ஆனால் நீங்கள் வெகு தூரத்திலிருந்து வந்ததால் நீங்கள் தங்க அனுமதிப்பேன்,” என்று கூறியதாகவும் ஆலிஸ் தெரிவித்தார். எனினும், இதை தனக்கு ஏற்பட்ட பெரும் அவமானமாக கருதிய ஆலிஸ், தனது கணவருடன் திருமண மண்டபத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
வீட்டிற்கு வந்த பிறகுதான் திருமணத்திற்கு எந்த நிறத்தில் ஆடை அணிந்து வரவேண்டும் என்ற தகவல் தனக்கு கிடைத்தது என்றும், ஆனால் தாங்கள் அணிந்திருந்த ஆடை ஒரு திருமணத்திற்கு பொருத்தமான நாகரீகமான உடைதான் என்றும் ஆலிஸ் தெரிவித்தார். இதை ஏன் இவ்வளவு தீவிரமாக மணமகள் எடுத்துக்கொண்டார் என்று தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இவ்வளவு நடந்தும், மணமகன் தனது கணவரின் நெருங்கிய நண்பர் என்றும், அவர் கூட இந்த விஷயத்தில் அமைதியாக இருந்தது தனக்கு அதிர்ச்சி அளித்ததாகவும் ஆலிஸ் தனது பதிவில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். “இப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்த நண்பர் என்ன கஷ்டப்படப் போகிறாரோ?” என்ற ரீதியில் பல கருத்துகள் பதிவாகி வருகின்றன. திருமணம் என்பது மணமக்கள் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குவதை கொண்டாடுவதற்கும், அவர்களை வாழ்த்துவதற்கும் வரும் ஒரு நிகழ்வு என்றும், இதில் போய் டிரஸ் கோட், யூனிஃபார்ம் எல்லாம் நிபந்தனை போடுவது அர்த்தமற்றது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
