ஆண்கள் மத்தியில், உயர் தர விந்தணு கொண்டவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அதாவது மிக உயர்ந்த மற்றும் மிக குறைந்த தரமான விந்தணுவை கொண்ட ஆண்களுக்கு இடையே உள்ள ஆயுட்கால வித்தியாசம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகும் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டேனிஷ் விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட 80,000 ஆண்களிடமிருந்து விந்தணு மாதிரிகளை பகுப்பாய்வு செய்தனர். ஒரு விந்து வெளியேற்றத்திற்கு 120 மில்லியனுக்கும் அதிகமான விந்தணுக்களை உற்பத்தி செய்தவர்கள், 5 மில்லியனுக்கும் குறைவாக உற்பத்தி செய்தவர்களை விட இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் நீண்ட காலம் வாழ்ந்ததாக கண்டறியப்பட்டது.
மிக உயர்ந்த தரமான விந்தணுவை கொண்ட ஆண்கள் சராசரியாக 80.3 ஆண்டுகள் வாழ்ந்தனர். அதேசமயம், மிகக் குறைந்த தரமான விந்தணுவை கொண்டவர்கள் சராசரியாக 77.6 ஆண்டுகள் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
“உண்மையில் விந்தணுவின் தரம் எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ, அவ்வளவு நீண்ட காலம் உயிர்வாழ்கிறார்கள் என்பது தெளிவாகிறது,” என்பது இந்த ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வின் மூலம் விந்தணுவின் தரம் ஒரு ஆணின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், பிற்காலத்தில் மருத்துவ நிலைகளுக்கு ஆளாகும் வாய்ப்பையும் பிரதிபலிக்கிறது என்பதை காட்டுகிறது. ஆய்வாளர்கள் சோதித்த விந்தணு தரத்தின் ஒவ்வொரு அளவீட்டிலும், குறைந்த தரம் முன்கூட்டிய மரணத்துடன் தொடர்புடையதாக இருந்தது.
இந்த ஆய்வில் பங்கேற்ற ஆண்களுக்கு 1965 மற்றும் 2015 க்கு இடையில் விந்தணு பகுப்பாய்வு செய்யப்பட்டது. அவர்கள் முழுமையான சம்மதத்திர்கு பின்னரே இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. விந்தணுவின் அளவு, விந்தணு செறிவு, விந்தணு வடிவம் மற்றும் நகரும் விந்தணுவின் விகிதம் ஆகியவற்றுக்காக மாதிரிகள் மதிப்பீடு செய்யப்பட்டன. சில ஆண்கள் விந்தணுவை உற்பத்தி செய்யாத நிலையில், மற்றவர்கள் மிக நல்ல விந்தணு தரத்தை கொண்டிருந்தனர்.
தேசிய பதிவேடுகளைப் பயன்படுத்தி, ஆய்வாளர்கள் விந்தணு பரிசோதனைகளுக்கு பிறகு 50 ஆண்டுகள் வரை ஆண்களின் ஆரோக்கியத்தை கண்காணித்தனர். பின்தொடர்தல் காலத்தில் 8,600 இறப்புகள் பதிவாகின, இது குழுவின் 11% ஆகும். கிட்டத்தட்ட 60,000 ஆண்கள் 1987 மற்றும் 2015 க்கு இடையில் விந்தணு மாதிரிகளை வழங்கினர். அவர்களின் பதிவுகளில் கல்வி நிலை மற்றும் விந்தணு பகுப்பாய்வுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்ட மருத்துவ நிலைகள் போன்ற கூடுதல் தகவல்கள் இருந்தன.
குறைந்த விந்தணு தரம் கொண்ட ஆண்களிடையே எந்த நோய்கள் அதிகமாக பொதுவாக காணப்படுகின்றன என்பதை கண்டறிய ஆய்வாளர்கள் இப்போது விரும்புகிறார்கள். குறிப்பிட்ட நிலைமைகள் அடையாளம் காணப்பட்டால், விந்தணு பகுப்பாய்வு அவர்கள் ஆபத்தில் இருப்பதாக காட்டினால், மருத்துவர்கள் ஆண்களுக்கு தடுப்பு நடவடிக்கைகளை அறிவுறுத்த முடியும்.
ஆனால் அதே நேரத்தில் குறைந்த விந்தணு தரத்தை கொண்ட ஆண்கள் பீதியடைய வேண்டியதில்லை என்பது முக்கியம், அவர்கள் தங்கள் குடும்ப மருத்துவருடன் எந்த கவலைகளையும் விவாதிக்க இந்த ஆய்வின் முடிவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
