கோடைக்கு இதமளிக்கும் கேப்பைக்கூழ்

By Staff

Published:

அந்தந்த பகுதிகளின் சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறை, உடல் உழைப்பு இவைகளை கணக்கில் கொண்டே அந்தந்த பகுதி மக்களின் உணவு அமைகின்றது. நகரத்து மக்கள் மலையில் விளையும் குதிரைவாலி, சாமை, திணை மாதிரியான விளைப்பொருட்களை சாப்பிட்டால் செரிக்காது. மலை ஏறி இறங்க, பாறையில் நடக்க இப்படி அந்த வாழ்க்கைமுறைக்கான உடல் பலத்தை தரும் வகையில்தான் அந்த பகுதியில் விளையும் பொருட்கள் அமையும்.

67c43a526506ffc1b0a690c39e8e69ee

விவசாயம் நமது பூர்வீக தொழில். வெயில் நம்ம ஊர் சீதோஷண நிலை. விவசாயத்துக்கு நேரம் காலம் பார்க்காம உழைக்கனும். எளிதில் ஜீரணிக்காத, வெயிலுக்கு குளிர்ச்சியாய், அதேநேரத்தில் உடலுக்கு தேவையான வலிமையும் கொடுக்கும் உணவாய் இருக்கனும். அதற்கு கம்பு, சோளம், கேழ்வரகு மாதிரியான உணவு வகைகளே நம்ம சீதோஷ்ண நிலைக்கு ஏற்றது.

கடந்த பத்து இருபது வருடக் காலங்களில் கூழ், களி சாப்பிடுறதை கௌரவக் குறைச்சலா நினைக்க ஆரம்பிச்ச மக்கள் இதையெல்லாம் சாப்பிடுறதைக் குறைத்துக்கொண்டதன் விளைவு. பிபி, சுகர், அல்சர்ன்னு நோய்கள். கடந்த சில வருடக்காலமா இப்போ கூழ், களி சாப்பிடுறது ஒரு ஃபேஷனாக மாறி இப்ப பழையபடிக்கு கேழ்வரகு கூழ், களி, கம்பஞ்சோறுன்னு மக்கள் மாறிக்கொண்டு வருகிறார்கள். வீதியோர தள்ளுவண்டிக்கடைகளில் இளைஞர்களும் கூழ்  வாங்கி சாப்பிடுறதை பார்க்கும்போது மனசு சந்தோசப்பட்டாலும், உடல் ஆரோக்கியத்தையும் எண்ணி பயப்படுகின்றதை மறுப்பதற்கில்லை. கூழ் கரைக்கும் கையின் சுத்தம், தண்ணீர், அங்கிருக்கும் பாத்திர பண்டத்தோட சுத்தம், அதுமட்டுமில்லாமல் தள்ளுவண்டியில் இருக்கும்போது விழும் தூசுன்னு ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் பாதகமான அம்சமும் இல்லாமல் இல்லை. அதனால், வீட்டிலேயே கூழ் செய்யும் முறையை பார்க்கலாம்.

7b4145d2303ecdbfc70c8baf31822ffa

தேவையான பொருட்கள்: 

கேழ்வரகு மாவு  – ஒரு கப்

பச்சரிசி அல்லது நொய் – ஒரு கைப்பிடி

உப்பு – தேவையான அளவு

கேழ்வரகை வாங்கி வந்து கல், மண் போக கழுவி முளைக்கட்டி வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைச்சு வைத்துக்கொள்ளுங்கள். விருப்பப்பட்டால் ஒரு கிலோ கேழ்வரகுக்கு, கால் கிலோ கம்பும், கால் கிலோ சோளமும் கலந்து அரைச்சுக்கலாம்.

ஞாயித்துக்கிழமை மாலை கூழ் காய்ச்சனும்ன்னு நினைத்தால் சனிக்கிழமைக் காலையே, ஒரு கப் கேழ்வரகு மாவை, தண்ணி விட்டு கரைச்சு புளிக்க விடனும். சிலர் கைப்பக்குவம் சீக்கிரம் உணவு கெட்டுப்போகாது, மாவு கரைச்சாலும் புளிக்காது.  . அதனால், மாவு கரைச்சு வெயிலில் வையுங்கள். மாவும் புளிச்சுடும்.

9ada48b4fb5dd9557cd2ea4d2bebf2fc-2

ஞாயிற்றுக்கிழமை மாலை பச்சரிசி (அ) நொய்யை இரண்டு மணிநேரம் ஊற வைத்து, அடிக்கணமான பாத்திரத்தில் குழைய, குழைய கஞ்சியாய் காய்ச்சிக்கனும். சிலர் ஊறவைத்த அரிசியை ரவை பதத்தில் உடைச்சு கஞ்சி காய்ச்சுவாங்க. கூழ் நைசா இருக்கும்.

6a3508cbf919773b0d91cd319670527d-1

ஸ்டவ்வை  சிம்ல வச்சு, புளிச்ச கேழ்வரகு மாவை தண்ணியாய் கரைச்சு, வெந்திருக்கும் கஞ்சியில் கொட்டி, கைவிடாம கிளறி விடவும். 

a6bc60620f9e95e6bd827e949da989b3

கொதிச்சு வரும்போது உப்பு சேர்த்துக்கோங்க.

a6bc60620f9e95e6bd827e949da989b3

கோதுமை நிறம் மாறி கேழ்வரகுப்போல பிரவுன் நிறத்துக்கு வர ஆரம்பிக்கும்.  நல்லா கொதிச்சு  அல்வா பதம் மாதிரி வந்ததும் அடுப்பை அணைச்சிடுங்க. சுவையான கூழ் ரெடி.  மறுநாள் அதாவது, திங்கட்கிழமை காலைல அந்த கூழ் மேல ஏடு மாதிரி  காய்ஞ்சிப் போயிருக்கும். அதை எடுத்துட்டு, உள்ள இருக்கும் கூழ்ல கொஞ்சம் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து கட்டி இல்லாம பிசைஞ்சு கொஞ்சம், கொஞ்சமா தண்ணி சேர்த்து கரைக்கனும்.

சிலருக்கு கூழை தண்ணியாய் குடிக்க பிடிக்கும், சிலருக்கு கெட்டியாய் குடிக்கப் பிடிக்கும். அதனால, அவங்கவங்க விருப்பத்துக்கேத்த அளவுக்கு தண்ணி சேர்த்துக்கோங்க. விருப்பப்பட்டா மோர், வெங்காயமும் போட்டுக்கலாம்.  சிலர் பொடிசா வெட்டிய  மாங்காயும் சேர்த்துப்பாங்க. கூழ் கரைக்கும்போது கையால கரைச்சா நல்லா இருக்கும். கையால கரைக்குறதான்னு, ஹைஜீனிக்கா நினைக்குறவுங்க க்ளவுஸ் போட்டுக்கோங்க.  மிச்சம் இருக்கும் கூழை வெளில வச்சாலும் ரெண்டு நாள் தாங்கும். ஃப்ரிட்ஜ்ல வச்சா ஒரு வாரம் தாங்கும். 

3cb69a22cf93d02479c3106babfd4a55

இப்ப அடிக்கும் வெயிலுக்கு வாரம் ஒரு நாளாவது அவசியம் கூழ் குடிக்கலாம். கூழ் குடிக்குறதால கால்சியம் சத்து அதிகமா கிடைக்கும். பசியின்போது சுரக்கும் அமிலச் சுரப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை நிலையாய் வைத்திருக்க உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும். நார் சத்தும் கூழ்ல அதிகம் இருக்கும். கூழுக்கு ஊறுகாய் நல்ல சைட் டிஷ். சுண்டைக்காய் வத்தல், மோர்மிளகாய், மாங்காய் பொரியல், பாவக்காய் பொரியல், முருங்கைக்கீரை பொரியல், அரைக்கீரை மசியல்ன்னும் சாப்பிடலாம்.

கூழ் சமைத்ததும் சாப்பிடக் கூடாது. குறைந்தது எட்டு மணிநேரம் கழிச்சுதான் சாப்பிடனும். சுடுக்கூழ் சளிப்பிடிக்கும்ன்னு சொல்வாங்க. கூழ் காய்ச்சும்போது ஜாக்கிரதையா கவனமா இருங்க. இல்லன்னா மேல கொட்டி கொப்பளம் எழும்பும். கொஞ்சம் சூடுப்பட்டாலும் கொப்பளம் எழும்பும். ஜாக்கிரதை!

ஜில்லென்ற கூழோடு கோடையை வரவேற்போம்.

Leave a Comment