மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள 45 வயதான விவசாயி ராம்ஸ்வரூப் என்பவருக்கு, அவரது ஆண்டு வருமானம் வெறும் ரூ.3 என்று குறிப்பிட்டு தாசில்தார் அலுவலகம் வருமானச் சான்றிதழ் வழங்கியிருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த சான்றிதழ் இணையத்தில் வைரலான நிலையில், எதிர்க்கட்சிகள் இதனை “உலகின் நம்பர் 1 ஏழை இவர் தான்” என கிண்டல் செய்து வருகின்றன.
கணக்காளர் பிழையும், அதிகாரிகளின் விளக்கமும்:
தாசில்தாரின் கையொப்பத்துடன் வழங்கப்பட்ட இந்த சான்றிதழில், ராம்ஸ்வரூப் மாதத்திற்கு 25 பைசா மட்டுமே சம்பாதிப்பதாகவும், வருடத்திற்கு ரூ.3 மட்டுமே அவரது வருமானம் என்றும் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சான்றிதழ் புகைப்படம் இணையத்தில் வைரலானதையடுத்து, அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இது ஒரு “கணக்காளர் தவறு” என்று விளக்கம் அளித்தனர். அந்த விவசாயியின் உண்மையான ஆண்டு வருமானம் ரூ.30,000 (மாதத்திற்கு ₹2,500) என்றும், அதற்குப் பதிலாகவே ரூ.3 என்று தவறுதலாக பதியப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது அந்தத் தவறு சரி செய்யப்பட்டு, புதிய வருமான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தாசில்தார் அலுவலக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காங்கிரஸின் கிண்டல்:
இந்த வருமான சான்றிதழின் புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி இதனை மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆட்சியை விமர்சிக்க பயன்படுத்தியுள்ளது. “மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆட்சியில் உலகிலேயே ஒரு ஏழை மனிதரைக் கண்டுபிடித்து விட்டோம் என்றும், அவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 தான் என்றும்” கிண்டலாக குறிப்பிட்டுள்ளது. இந்தச் சம்பவம், அரசின் நிர்வாக திறன் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
