மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கை பற்றிய மர்மம், அமெரிக்கப் பெண் பாம் ரெனால்ட்ஸ் (Pam Reynolds) என்பவரின் அசாதாரண வழக்கின் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. ஒரு அரிய மூளை அறுவை சிகிச்சையின் போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவ ரீதியாக இறந்ததாக அறிவிக்கப்பட்ட ரெனால்ட்ஸ், பின்னர் திடீரன உயிர்த்தெழுந்து தனது இறப்பின் அனுபவத்தை விவரித்தார். அதில் அவர் ஒரு பிரகாசமான ஒளியை பார்த்ததாகவும், இறந்த உறவினர்களை கண்டதாகவும், ‘சொர்க்கம்’ போன்ற ஒன்றை கண்டதாகவும் கூறினார். அவரது இந்த வாக்குமூலம் மருத்துவ நிபுணர்களை திகைக்க வைத்ததுடன், மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கை குறித்த விஞ்ஞானிகளின் ஆய்வுகளை மேலும் தூண்டியதூ.
பிரபல பாடகியும், பாடலாசிரியருமான பாம் ரெனால்ட்ஸ், அனியூரிசம் (aneurysm) எனப்படும் மூளை ரத்தக்குழாய் வீக்கத்துக்காக ஒரு சிக்கலான மற்றும் மிகவும் ஆபத்தான மூளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த அறுவை சிகிச்சைக்கு அவரது உடல் வெப்பநிலையை 10 டிகிரி செல்சியஸ் ஆக குறைத்தல், அவரது இரத்தத்தை அகற்றுதல் மற்றும் அவரது இதயத்தை தற்காலிகமாக நிறுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மருத்துவர்களால் எடுக்கப்பட்டது. இது ‘ஹைப்போதெர்மிக் கார்டியாக் அரெஸ்ட்’ (hypothermic cardiac arrest) என்று அழைக்கப்படுகிறது.
இந்த நேரத்தில், பாம் மருத்துவ ரீதியாக இறந்த நிலையில் இருந்தார். அவரது மூளை மற்றும் உடலில் எந்த ஒரு செயல்பாடும் இல்லை. இருப்பினும், அறுவை சிகிச்சைக்கு பிறகு உணர்வு திரும்பியதும், பாம் ஒரு அசாதாரண அனுபவத்தை விவரித்தார்.
பாம், அறுவை சிகிச்சையின் போது தான் உணர்வுடன் இருந்ததாகவும், அறுவை சிகிச்சை அறையில் நடந்த அனைத்தையும் கேட்க முடிந்ததாகவும் மருத்துவர்களிடம் கூறினார். மருத்துவர்களின் உரையாடல்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கருவிகளை அவர் துல்லியமாக விவரித்தார். மேலும், அவர் தனது உடலுக்கு மேலே மிதந்து, அறுவை சிகிச்சையை மேலிருந்து பார்த்ததாகவும் கூறினார்.
அறுவை சிகிச்சையின் போது ஒரு பிரகாசமான ஒளி தன்னை நோக்கி இழுத்ததாகவும் பாம் விவரித்தார். இந்த ஒளியை நோக்கி செல்லும்போது, இறந்துபோன உறவினர்கள் தன்னை அழைப்பதை கண்டதாகவும் அவர் கூறினார். இருப்பினும், ஒரு மர்மமான நிழல் தன்னைத் திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்தார். அந்த அனுபவம் முடிவடைய வேண்டாம் என்று தான் விரும்பியதாகவும், ஆனால் இறுதியில் தனது உடலுக்கு திரும்பி வந்ததாகவும் பாம் கூறினார். அவரது வாக்குமூலம் மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இதுகுரித்து அறுவை சிகிச்சை நிபுணர் கூறியபோது, ‘பாம் முற்றிலும் மயக்க நிலையில் இருந்தபோதிலும், அவரது மூளை செயல்பாடு எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில், அவர் விவரித்த கருவிகள் மற்றும் உரையாடல்கள் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்தினார்.
பாம் ரெனால்ட்ஸின் அனுபவம், ‘மரணத்தின் அருகில் ஏற்பட்ட அனுபவம்’ பற்றிய மிகவும் விவாதிக்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக மாறியது. சில விஞ்ஞானிகள் இதை மூளைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை அல்லது மருந்துகளின் தாக்கம் என்று கூறினாலும், மற்றவர்கள் இதை ஆன்மா மற்றும் மரணத்திற்கு பிந்தைய வாழ்வுக்கான ஆதாரமாக கருதுகின்றனர். இந்த நிகழ்வு, மனித உணர்வு மற்றும் மரணத்தின் மர்மம் குறித்த ஆழமான கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
