வெயில்ல சுத்தி அலைந்து திரிபவர்கள் தாகமெடுத்து தவிக்கையில் கலர்கலரான குளிர்பானத்தை குடிப்பது வழக்கம். குளிர்பானங்கள் உடலுக்கு தீங்குன்னு விழிப்புணர்வு உண்டாகி இளநீர், பிரஷ் ஜூஸ் எனப்படும் இயற்கை பழச்சாறு, கரும்புசாறு பக்கம் திரும்பி இருக்கின்றனர். இளநீர், பழச்சாறுகள் எல்லாம் இருபது, நாற்பது என விலை அதிகம். அதனால் ஏழைகளுக்கு கரும்புச்சாறு மட்டுமே இவர்களுக்கு கைகொடுக்கும். உடனடியா புத்துணர்வு கிடைக்கவும், விலை குறைவாகவும் இருக்க வேண்டுமென்றால் இருக்கவே இருக்கிறது எலுமிச்சை பழச்சாறு.
எலுமிச்சையை தேவ கனி என்று சொல்வார்கள். இது தேவ கனி மட்டுமில்லை. ஏழைகளின் கனியும்கூட… இது எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடியது. எலுமிச்சை, மலேரியா, காலரா, டைபாய்டு போன்ற நோய்களை அழிப்பதிலும் வராமல் தடுப்பதிலும் எலுமிச்சைக்கு இணையே இல்லை. கிருமி நாசினியும் கூட. வயிற்றில் உள்ள கிருமிகளை அழித்து, உடலை சுத்தம் செய்யக்கூடியது எலுமிச்சை பழச்சாறு. வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ள அன்பர்கள் எலுமிச்சை பழச்சாறு குடித்து வந்தால், அதில் இருந்து மீளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் வீரியமும் சக்தியும் வல்லமையும் தயாள குணமும் எலுமிச்சைக்கு உண்டு.
இனி எலுமிச்சை பழச்சாறு செய்முறையை பார்க்கலாம்.
லெமன் ஜூஸ் செய்முறை:
எலுமிச்சை பழம்
சர்க்கரை
விருப்பப்பட்டால் உப்பு, மிளகு தூள்
எலுமிச்சையை வெட்டி பிழிந்து சாறெடுக்கவும், அதனுடன், நான்கு கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். ருசிக்கேற்ப சர்க்கரை சேர்த்து கலந்து விருப்பப்பட்டால் மிளகுத்தூள், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் ஃப்ரிட்ஜில் வைத்து அல்லது ஐஸ்கட்டி கலந்து பரிமாறலாம். மிளகுத்தூள் வெயிலினால் சளி பிடிக்காமல் இருக்கும். உப்பு ருசியை அதிகரிக்கும். சர்க்கரைக்கு பதிலா வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக்கொள்ளலாம். ஆரோக்கியத்துக்கு இன்னமும் நல்லது.