ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த 19 வயது இளம் பெண், தனது முதல் மாத சம்பளம் தாமதமானதால் ஏற்பட்ட விரக்தியில், “எனது HR-ஐ ஒரு அறைவிட்டால் என்ன நடக்கும்?” என்று ரெடிட் தளத்தில் ஆலோசனை கேட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பல விவாதங்களை தூண்டிவிட்டுள்ளது.
பொதுவாக, ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தால், முதல் மாத சம்பளம் சில நாட்கள் தாமதமாவது என்பது நடைமுறை வழக்கம். புதிய ஊழியர்களின் அடையாள சரிபார்ப்பு, வங்கிக் கணக்கு சரிபார்ப்பு போன்ற சில நிர்வாக பணிகள் காரணமாக, மற்ற ஊழியர்களுக்கு சம்பளம் வரும் அதே நேரத்தில் புதியவர்களுக்கு சம்பளம் வராது. இது ஒரு பொதுவான நடைமுறைதான்.
இளம் பெண்ணின் ஆத்திரமும் கேள்வியும்:
ஆனால், இந்த 19 வயதுப் பெண், “நான் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். என்னுடைய HR ஒரு சோம்பேறி என்பதால் என்னுடைய சம்பளத்தை தாமதப்படுத்தி கொண்டிருக்கிறார். அவரை ஒரு அறைவிட்டால் என்ன ஆகும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். என் HR ஒரு சோம்பேறி, நான் அவரை ஒரு அறைவிட வேண்டும் என்று நினைக்கிறேன். அவ்வாறு அவரை அறைந்தால் என்ன நடக்கும்? ஏதேனும் பெரிய விளைவுகளை நான் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுமா?” என்று ஆலோசனை கேட்டுள்ளார்.
நெட்டிசன்களின் எதிர்வினைகளும் விவாதங்களும்:
இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், அவரது இந்த அவசரமான அணுகுமுறையை பலரும் நகைச்சுவையுடன் பதிவு செய்து வருகின்றனர். சிலர், “அவசரப்பட்டு செயல்பட வேண்டாம், முதல் மாத சம்பளம் கொஞ்சம் தாமதமாகத்தான் வரும், காத்திருங்கள்” என்று அறிவுரை கூறியுள்ளனர்.
இதேவேளையில், இந்தச் சம்பவத்தை ‘ஜென் Z’ தலைமுறையினரின் “அவசர புத்தி” என்று சிலர் விமர்சித்துள்ளனர். மேலும் சிலர், இன்றைய டிஜிட்டல் உலகில் சம்பளத்தை தாமதப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், சில மணி நேரங்களில் புதிய பணியாளர்களின் சம்பளத்தை செலுத்தும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். சில HR துறையினர் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த பதிவு நகைச்சுவையாக பகிரப்பட்டிருந்தாலும், இது ஊழியர் மற்றும் நிர்வாகத்தின் மத்தியில் உள்ள உறவுகள், சம்பள தாமதங்கள், மற்றும் டிஜிட்டல் யுகத்தில் ஏற்படும் தாமதத்தை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை ஆகியவற்றை குறித்து பெரிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
