தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய பயணத்தில், இப்போதே பல சுவாரஸ்யமான திருப்பங்களை சந்தித்து வருகிறது. சமீபத்தில் அதிமுக மேற்கொண்டதாக கூறப்படும் ஒரு ரகசிய சர்வேயின் அதிர்ச்சி ரிசல்ட்கள், அக்கட்சியின் தலைமைக்கு, குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு, ஒரு புதிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசுகின்றன. அந்த சர்வே முடிவுகளின்படி அதிமுக – பாஜக கூட்டணி தேர்தலை சந்தித்தால் அதிகபட்சமாக 70 முதல் 80 தொகுதிகள் கிடைக்க்கும் என கூறப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வலம் வருகிறது. இதனால், எடப்பாடி பழனிசாமி, நடிகர் விஜய் பக்கம் போயே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக செய்திகள் கசிகின்றன.
மறுபுறம் நடிகர் விஜய்யை பொறுத்தவரை, இது அவரது முதல் சட்டமன்றத் தேர்தல். மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன், தேமுதிகவின் விஜயகாந்த் ஆகியோர் தங்களது முதல் தேர்தல்களில் பெரிய கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் சந்தித்த சறுக்கலை தவிர்க்க வேண்டும் என்ற ஆர்வம் விஜய்யிடம் இருக்கும். எனவே, முதல் தேர்தலில் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி அமைப்பது அவருக்கு மிகவும் அவசியம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கூட்டணிச் சிக்கல்: பாஜகவின் நிலை என்ன?
அதிமுக – பாஜக கூட்டணி தொடர அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஒருபுறம் பேசப்பட்டாலும், மறுபுறம், பாஜகவை அதிமுக கூட்டணியிலிருந்து கழட்டிவிட கூடும் என்ற பேச்சும் எழுகிறது. பாஜகவை கழட்டிவிட்டால் தான் விஜய் மட்டுமின்றி திமுக கூட்டணியில் தற்போதுள்ள காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் அதிமுகவை நோக்கி வர வாய்ப்பு உள்ளது.
புதிய ‘மெகா’ கூட்டணி: 200 தொகுதிகளின் கனவு?
அரசியல் கணிப்பாளர்களின் பார்வையில், ஒரு மாபெரும் கூட்டணி உருவாக வாய்ப்புள்ளது. அதாவது, அதிமுகவுடன் காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகம், மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்தால், அது 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் கூட்டணியாக அமையும் என்ற கணிப்புகள் பகிரப்படுகின்றன.
எடப்பாடியின் தர்மசங்கடம் – கூட்டணி ஆட்சிக்குச் சம்மதிப்பாரா?
இந்த கூட்டணி உறுதியானால், அது திமுகவுக்கு ஒரு பெரும் பின்னடைவாக அமைந்து, கிட்டத்தட்ட அவர்களின் வீழ்ச்சியை உறுதி செய்யும் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த கூட்டணி வெற்றி பெற்றால், அது ஒரு கூட்டணி ஆட்சியாகவே அமையும். தனிப்பெரும்பான்மை ஆட்சிதான் தனது இலக்கு என்று கூறிவரும் எடப்பாடி பழனிசாமி, இந்த சூழ்நிலையில் கூட்டணி ஆட்சிக்கு தலைமை தாங்குவாரா அல்லது அவரது நிலைப்பாடு மாறுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
