தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைத்தால் பாஜக அமைச்சரவையில் பங்கேற்கும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கடி கூறிவரும் நிலையில், “ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் ஆவேசமாக பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் நேரடி சவால்:
அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார் என்றும், அமித்ஷாவின் தலையாட்டி பொம்மையாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இத்தகைய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியுள்ளார். ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது என்றும், அதிமுக கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார். இதன் மூலம், கூட்டணி ஆட்சி இல்லை என்பதை அமித்ஷாவுக்கு மறைமுகமாக இல்லாமல் நேரடியாகவே பதில் கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் நிலைப்பாடு மற்றும் அதிமுகவின் பலம்:
இதற்கு மேலும், ஆட்சியில் பங்கு, அமைச்சரவையில் பங்கு என மத்திய அமைச்சர் அமித்ஷா அல்லது அண்ணாமலை கூறி கொண்டிருந்தால், பாஜகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றக்கூட எடப்பாடி பழனிசாமி தயங்க மாட்டார் என்றும், அதனால் மத்திய அரசு கொடுக்கும் பிரச்சனைகளை கூட பாசிட்டிவாக மாற்றி, அதை ஓட்டாகவும் மாற்றிவிடும் வல்லமை எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு என்றும் கூறப்பட்டு வருகிறது.
அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேற்றப்பட்டால், அதிமுக தலைவர்கள் மீது சிபிஐ சோதனை வந்தால், அமலாக்கத்துறை சோதனை வந்தால் மக்கள் உடனே புரிந்து கொள்வார்கள் என்றும், அதிமுகவுக்கு அனுதாப ஓட்டு விழும் என்றும், தேர்தல் நேரத்தில் இந்த ரிஸ்க்கை எடுக்க பாஜக விரும்ப மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
அரசியல் விமர்சகர்களின் பார்வை:
எனவே, ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை இனி நிறுத்திவிட்டு, அதிமுகவோடு இணைந்து தேர்தல் பணியாற்றினால் மட்டுமே பாஜக தப்பிக்க முடியும் என்றும், அதை விட்டுவிட்டு ஆட்சியில் பங்கு, அமைச்சரவையில் பங்கு என அதிகார தொணியில் பேசிக்கொண்டிருந்தால் தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை:
ஜெயலலிதாவையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சசிகலாவையே கட்சியை விட்டு விரட்டியவர் எடப்பாடி பழனிசாமி என்றும், தன்னை முதல்வராக்கிய டிடிவி தினகரனையே “வந்து பார்” என்று சொன்னவர் என்றும், ஓ. பன்னீர்செல்வத்தை ‘லெஃப்ட் ஹேண்டில் டீல்’ செய்தவர் என்றும் அதிமுக தொண்டர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்டவர் அமித்ஷாவுக்கு எல்லாம் பயப்பட மாட்டார் என்றும், அவரது கட்டுப்பாட்டில் தான் கட்சி எப்போதும் இருக்கும் என்றும் அதிமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
