தனித்து போட்டியிட திராணி இருக்குதா? திமுகவை பார்த்து கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்ட கூட்டணி கட்சிகள்..

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்கும் போதெல்லாம், திமுக சொல்லும் பதில் “நீங்கள் தனியாக நின்றால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற மாட்டீர்கள். ஆனால் எங்களோடு கூட்டணி வந்தால், இந்த…

dmk

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்கும் போதெல்லாம், திமுக சொல்லும் பதில் “நீங்கள் தனியாக நின்றால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற மாட்டீர்கள். ஆனால் எங்களோடு கூட்டணி வந்தால், இந்த சில எண்ணிக்கையிலான தொகுதிகள் கிடைக்கும்” என்று கூறித்தான் இதுவரை அடக்கி வைத்திருந்தன. அதனால்தான் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் பல அதிருப்திகளை சகித்துக் கொண்டே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இப்போது இந்த கூட்டணி கட்சிகள் இதே கேள்வியை திரும்பவும் திமுகவிடம் கேட்க ஆரம்பித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. திமுக இதுவரை தனது தேர்தல் வரலாற்றில் ஒருமுறை கூட தனித்து போட்டியிட்டது கிடையாது. எனவே, இந்தக் கூட்டணி கட்சிகள் தற்போது “நீங்கள் தனித்துப் போட்டியிட்டால் ஆட்சியை பிடிக்க முடியாது. கூட்டணி கட்சிகளின் உதவி இருந்தால்தான் உங்களால் ஆட்சியை பிடிக்க முடியும், எதிர்க்கட்சியாக கூட தனித்துப் போட்டியிட்டால் வெற்றி கிடைக்காது” என்று கூறி வருவதால், திமுக தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதுவரை கேள்வி கேட்காமல் கொடுத்த தொகுதிகளை வாங்கி கொண்டு இருந்த சின்ன கட்சிகள் கூட, தற்போது கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் இரு மடங்கு அதிகமாக கேட்பதாக கூறப்படுகிறது. இந்த நிலை திமுகவுக்கு நன்றாகத் தெரியும். எனவே, இதுவரை மிரட்டி காரியத்தை சாதித்து கொண்டிருந்த திமுக, தற்போது இறங்கி வந்து சமாதானத்திற்காக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், தொகுதிகளை அதிகம் கொடுக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒருவேளை எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால், கூட்டணி கட்சிகள் வெளியேறி வேறு கூட்டணியில் சென்றுவிடும் வாய்ப்புகளும் உள்ளன. அதிமுகவிலும் 118 என்ற மேஜிக் நம்பர் கிடைக்கவில்லை என்றால் கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் வரும். அதேபோல், விஜய் ஏற்கனவே கூட்டணி ஆட்சி என்று தெளிவுபடுத்துகிறார். எனவே, இனி “ஆட்சியில் பங்கு கொடுத்தால் மட்டும்தான் கூட்டணி; இல்லையென்றால் கூட்டணிக்கு வரமாட்டோம்” என்ற நிபந்தனையைத்தான் கூட்டணி கட்சிகள் முதலில் விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை பெரிய கட்சிகள் சின்ன கட்சிகளை மிரட்டிக் கொண்டிருந்த நிலையில், தற்போது சின்ன கட்சிகள் பெரிய கட்சிகளை மிரட்டிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.