திமுகவுக்கு எப்படி சிறுபான்மையினர் வாக்குகள் மொத்தமாகக் கிடைக்குமோ, அதேபோல ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளும், அவர்களுடைய குடும்பத்தினர் வாக்குகளும் மொத்தமாக கிடைக்கும். ஆனால், இந்த முறை இரண்டுமே திமுகவுக்கு கிடைக்காது என்று கூறப்படுவதால், திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் மிகவும் குறையும் என்று அரசியல் விமர்சகர் ரவிசங்கர் என்பவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “ஓரணியில் தமிழ்நாடு” சுற்றுப்பயணத்தின் போது 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார். ஆனால், கண்டிப்பாக திமுக இந்த முறை 200 தொகுதிகளில் ஜெயிக்க வாய்ப்பில்லை என்று கூறிய ரவிசங்கர், ஏற்கனவே வந்த சில கருத்துக்கணிப்புகளின்படி அதிகபட்சமாக 100 தொகுதிகள் தான் திமுக ஜெயிக்க முடியும் என்று தெரிவித்தார். ஆனால், அதே நேரத்தில் அது இன்றைய நிலைமை என்றும், இனிவரும் காலத்தில் திமுக கூட்டணி கட்சிகள் கூட்டணியில் இருந்து பிரிந்தால் கண்டிப்பாக இன்னும் வாக்குகள் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.
முக்கியமாக, மதிமுக வெளியே வர வாய்ப்பு இருப்பதாகவும், கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்துதான் திமுக கூட்டணியின் வாக்கு வங்கியை கணிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் முக்கிய வாக்குறுதியை கொடுத்தார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் இந்த நான்காண்டு காலத்தில் நிறைவேற்றவில்லை. சமீபத்தில் கூட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தியபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் ஒரு பகுதியினர் விஜய்யை சந்தித்தபோது, விஜய் மீது அவர்களுக்கு நம்பிக்கை வந்திருப்பதாக தெரிகிறது. எனவே, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளும், அவர்களுடைய குடும்பத்தினர் வாக்குகளும் மொத்தமாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் என்றும், விஜய்க்கோ அல்லது அதிமுகவுக்கோ செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, சிறுபான்மையினர் வாக்குகளை கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் விஜய் பிரிக்கிறார் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, இளைய தலைமுறை வாக்குகள், முதல் முறை வாக்காளர்கள், பெண்கள், அதிமுக-திமுகவை பிடிக்காத வாக்காளர்கள், பாஜகவை வெறுக்கும் வாக்காளர்கள், திமுக ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ள வாக்காளர்கள் ஆகியவை விஜய்க்கு ஒரு பெரிய சதவீதம் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் அதிமுக கூட்டணிக்கும் செல்வதால், திமுக கூட்டணியின் வாக்குகள் மிகவும் குறையும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, திமுக கூட்டணியில் சலசலப்பு இருப்பதாகவும், இந்த சலசலப்பை சரி செய்வது எப்படி என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசனை செய்வார் என்றும், அவ்வளவு எளிதில் ஸ்டாலின் தற்போதை ஆட்சியை விட்டு கொடுத்து விட மாட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது. அடுத்து வரும் எட்டு மாதங்கள் திமுகவுக்கு சவாலாக இருந்தாலும், திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்குத் தேவையான அனைத்து தந்திரங்களையும் வழிகளையும் கடைபிடிப்பார் என்றுதான் கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
