தமிழக அரசியலில் தேர்தல் நெருங்க நெருங்க பரபரப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், கூட்டணி மாற்றங்கள், புதிய கூட்டணிகள் என பல செய்திகள் தினமும் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என இரண்டே கூட்டணி மட்டுமே களத்தில் இருந்தன. சீமான் தனித்து போட்டியிட்டாலும், அவரது கூட்டணியை அரசியல் விமர்சகர்கள் கூட கண்டு கொள்வதில்லை. எனவே, பெரும்பாலான தேர்தல்கள் இருமுனை போட்டியாகவே இருந்தன. மக்கள் நல கூட்டணி என ஒரு சிலரால் மூன்றாவது கூட்டணி வந்தாலும், அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முதல் முறையாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக, திமுக இணையாக ஒரு புதிய கூட்டணி உருவாகியுள்ளது என்றால், அது விஜய் தலைமையிலான கூட்டணிதான். ஒரு பக்கம் விஜய்க்கு ஆதரவு போய்விடக்கூடாது என்று திமுக ஒரு கூட்டணி முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்னொரு பக்கம் விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க, அதிமுக கூட்டணி பெரும் முயற்சி செய்து வருகிறது. விஜய் இரு கூட்டணிகளையுமே அச்சுறுத்தி வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இதுவரை திமுக கொடுத்த தொகுதிகளை மட்டுமே வாங்கிக் கொண்டு, திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களையும் பெரிதாக விமர்சனம் செய்ய முடியாமல் இருந்த கூட்டணி கட்சிகள், தற்போதுதான் துணிந்து விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளன. குறிப்பாக, காமராஜர் விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக திமுகவை விமர்சனம் செய்து வருவது கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு தன்னுடைய கதவை விஜய் திறந்து வைத்திருக்கும் நிலையில், ரகசிய பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், விஜய்-காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவே கூறப்படுகிறது. அத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்க் கூட்டணியில் சேர அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இந்த மூன்று கட்சிகள் சேர்ந்தாலே ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை பெற்றுவிடலாம் என்றும் கணிக்கப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 40 தொகுதிகள், காங்கிரஸ் கட்சிக்கு 50 தொகுதிகள் என 90 தொகுதிகள் போக, மீதமுள்ள தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்றும், விஜய் முதல்வர், காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளில் இருந்து தலா இரண்டு துணை முதல்வர்கள் என பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, முக்கிய அமைச்சர்கள் பதவியும் காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், முதல் முறையாக தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டுக்கு பிறகு திராவிடம் இல்லாத ஒரு அரசு அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், மக்கள் என்ன செய்ய காத்திருக்கிறார்கள்? புதிய கூட்டணியை வரவேற்பார்களா? இரண்டு திராவிட கூட்டணிகளுக்கு முடிவு கட்டுவார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
