தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றால் அண்ணாமலைதான் முதல்வர் என அமித்ஷா கணக்கு போட்டு வைத்திருப்பதாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி என்ன அவ்வளவு லேசுப்பட்டவரா, தன்னுடைய பதவியை காப்பாற்றுவதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்று கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணி என்று முதலில் சொன்ன அமித்ஷா, அதன் பிறகு பாஜக-அதிமுக கூட்டணி என்று கூறினார். அதன் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் தான் கூட்டணி ஆட்சி அமையும் என்றும், முதல்வர் வேட்பாளராக அதிமுகவிலிருந்து ஒருவர்தான் இருப்பார் என்றும் அமைச்சர் கூறினார். இந்த நிலையில், அண்ணாமலை ஒரு படி மேலே போய், தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று கூறினார்.
தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அண்ணாமலைக்கு வேறு பெரிய பொறுப்புகள் கொடுக்கப்படும் என்றும், அவர் தேசிய அளவில் ஒரு பொறுப்பை ஏற்பார் அல்லது மத்திய அமைச்சர் பொறுப்பை ஏற்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அமித்ஷாவின் கணக்கு வேறு மாதிரியாக உள்ளது.
சமீபத்தில் அவர் மதுரைக்கு வந்தபோது, அண்ணாமலையின் பெயரை கோஷமிட்டதும், கூட்டத்தில் உள்ளோர் ஆரவாரத்துடன் கரகோஷம் செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தமிழக பாஜக தலைவரை மாற்றி தவறு செய்துவிட்டோம் என்று அப்போதே அவர் உணர்ந்துவிட்டார். இருப்பினும், அதிமுக கூட்டணிக்காகத்தான் வேறு வழி இல்லாமல் அண்ணாமலையை நீக்கி இருந்த அமித்ஷா, தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் அண்ணாமலையை தான் முதல்வராக்க வேண்டும் என்றும், அதற்கு எடப்பாடி பழனிசாமி மீது தன்னுடைய அனைத்து மிரட்டல்களையும் விடுப்பார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார் என்றும், அவர் சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்தவர் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
எனவே, அமித்ஷா இப்படி ஒரு மனக்கணக்கு போட்டால், தேர்தலுக்கு முன்பே பாஜகவை கூட்டணியிலிருந்து ஈபிஎஸ் விரட்டி அடித்து விடுவார் என்றும், விஜய்யை கூட்டணியில் சேர்த்துக் கொள்வார் என்றும் கூறப்பட்டு வருகிறது. மொத்தத்தில், அதிமுக-பாஜக கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
