மொத்தமும் போச்சா.. கஷ்டப்பட்டு மக்கள் மத்தியில் வளர்ந்த UPI.. GSTயின் தவறான அணுகுமுறையால் ஒட்டுமொத்தமாக அழியும் அபாயம்.. ஜூலை 25ஆம் தேதி ஸ்டிரைக்..

சின்னஞ்சிறு பெட்டிக்கடைகளில் கூட தற்போது UPI பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், UPI பரிவர்த்தனையின் அடிப்படையில் சில வணிகர்களுக்கு GST அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்ய வேண்டும், வரி செலுத்த வேண்டும்…

up1

சின்னஞ்சிறு பெட்டிக்கடைகளில் கூட தற்போது UPI பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், UPI பரிவர்த்தனையின் அடிப்படையில் சில வணிகர்களுக்கு GST அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்ய வேண்டும், வரி செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிறு வணிகர்கள் மற்றும் பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து, பெங்களூரில் சிறு வணிகர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து ஜூலை 25ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தத் திட்டமிட்டு இருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.

முதன்முதலில் UPI இந்தியாவில் அறிமுகம் செய்தபோது, இந்தத் தொழில்நுட்பம் கிராமம் வரை செல்லாது என்றும், ஒரு கிராமத்தில் உள்ள ஒருவரிடம் எப்படி இணையம் இருக்கும், அவர் எப்படி பண பரிவர்த்தனை செய்வார் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூட இந்த கேள்வியை எழுப்பினார். ஆனால், அவரே ஆச்சரியப்படும் அளவுக்கு இன்று UPI சின்னஞ்சிறு கடைகளில் கூட வளர்ந்துள்ளது. தள்ளுவண்டியில் விற்பனை செய்து வரும் வணிகர்கள் கூட இன்று UPI வசதி வைத்துள்ளனர் என்பதும், பத்து ரூபாய்க்கு வாழைப்பழம் வாங்கினால் கூட அதை UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்தவர்களின் டர்ன்ஓவரை பார்த்து, ஜி.எஸ்.டி அதிகாரிகள் வங்கிகள் மூலம் அறிக்கை பெற்று, சம்பந்தப்பட்ட சிறு வணிகர்கள் மற்றும் குறு வணிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக கூறப்படுவதுதான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது வர்த்தகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

டிஜிட்டல் பணப்பரிமாற்றம் என்பது, பொருள்கள் விற்பனையில் ₹40 லட்சம் அல்லது சேவைகளுக்கு ₹20 லட்சத்தைத் தாண்டிய வர்த்தகர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட பெங்களூரில் மட்டும் 5,500-க்கும் மேற்பட்ட சிறு வணிகர்கள் நோட்டீஸைப் பெற்றுள்ளதாகவும், சிலரின் பரிவர்த்தனைகள் ரூ.2 கோடியை தாண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

“தாங்கள் தவறாகத் தண்டிக்கப்படுவதாகவும், தங்களுக்கு அதிகமாக பணப்பரிவர்த்தனை நடந்தாலும் மிகவும் குறைவான லாபம்தான் கிடைத்து வருகிறது என்றும், இதில் எப்படி நாங்கள் ஜி.எஸ்.டி. கட்ட முடியும்?” என்றும் வணிகர்கள் கூறி வருகின்றனர்.

இதனை அடுத்து, மூன்று கட்டப் போராட்டம் நடத்த வணிகர்கள் முடிவு செய்துள்ளனர். ஜூலை 23ஆம் தேதி பால் விற்பனை நிறுத்தப்படும் என்றும், ஜூலை 24ஆம் தேதி குட்கா மற்றும் சிகரெட் விற்பனை நிறுத்தப்படும் என்றும், ஜூலை 25ஆம் தேதி சிறு கடைகள், பேக்கரிகள், மளிகை கடைகள் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடையடைப்பு போராட்டம் அரசுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பும் நோக்கம் கொண்டது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெங்களூரில் உள்ள பல கடைகளில் தற்போது UPI வசதி இல்லை, ரொக்கம் மட்டுமே வாங்கப்படும்” என்று பதாகைகள் வைக்கப்படும் அளவுக்கு வணிகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரை சேர்ந்த ஒரு வணிகர், தான் தினமும் ₹3,000 மட்டுமே சம்பாதிப்பதாகவும், ஆனால் லட்சக்கணக்கில் வரி நோட்டீஸ் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை முழுமையாக துண்டித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜி.எஸ்.டி. அதிகாரிகள், வரம்பை தாண்டி வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன என்றும், வர்த்தகர்கள் சரியாக தகவல் தொடர்பு இல்லாததே காரணம் கூறுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், சிறு வணிகர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படும் என்றும், ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு திட்டங்களை தொடங்குதல், வர்த்தக சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில், கடந்த 10 ஆண்டுகளில் UPI என்பது நகரங்களில் மட்டுமல்லாமல், சின்னஞ்சிறு கிராமங்களுக்குக் கூட சென்றுவிட்ட நிலையில், இனி UPI மொத்தமாக வர்த்தகர்கள் கைவிடப்படும் நிலை ஜி.எஸ்.டி.யின் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ளது என்றும், கஷ்டப்பட்டு மக்கள் மத்தியில் சேர்த்த ஒரு தொழில்நுட்பத்தை அரசே தனது தவறான நடவடிக்கையால் திரும்ப பெறும் அளவுக்கு ஆகிவிடக்கூடாது என்றும், அதற்கு முன்னரே அரசு இது குறித்துச் சுமூகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Bengaluru Small Business Owners to Strike on July 25 Over UPI-Based GST Notices