விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை ChatGPT உதவியுடன் காவல்துறையினர் மூன்று நொடிகளில் கண்டுபிடித்த சம்பவம் தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது. இது காவல்துறையில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
சம்பவம் நடந்தது எப்படி?
தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு மாகாணமான உட்டோன் தானி என்ற பகுதியில், அடையாளம் தெரியாத ஒரு மர்ம வாகனம் சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற இருவர் மீது மோதிவிட்டு தப்பி சென்றுவிட்டது. அந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை வைத்து சல்லடை போட்டு தேடியும், விபத்து ஏற்படுத்திய வாகனம் எது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
சாட்ஜிபிடி-யின் அதிரடி செயல்பாடு
இந்த நிலையில் தான், விபத்து நடந்த இடத்தில் வாகனத்தின் ஒரு சிறிய பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதியை புகைப்படம் எடுத்து, சாட்ஜிபிடி இடம் அது எந்த வாகனத்தின் பாகம் என்று கேள்வி கேட்ட நிலையில், சாட்ஜிபிடி வெறும் மூன்று நொடிகளில், அது ஒரு டொயோட்டா ஹிலக்ஸ் விக்கோ சாம்பியன் (Toyota Hilux Vigo Champ) என்ற மாடல் வாகனம் என்பதை கண்டுபிடித்து கொடுத்தது. அதுமட்டுமின்றி, இந்த பாகம் முன்பக்க பம்பர் மேல் இருக்கும் பகுதி என்றும் தெரிவித்தது.
குற்றவாளி கைது
அதன் பின்னர், அந்த வழியாக சென்ற டொயோட்டா வாகனத்தை காவல்துறையினர் தேடிய நிலையில், மிக எளிதில் அந்த வாகனத்தை கண்டுபிடித்தனர். அதனை அடுத்து, சம்பவத்தை அன்று வாகனத்தை ஓட்டிய ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தாய்லாந்து காவல்துறையின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இணைய பயனாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் கிடைத்த ஒரு சின்ன பகுதியை கொண்டு சாட்ஜிபிடி உதவியால் 3 நொடிகளில் அது எந்த வாகனம் என்று கண்டுபிடித்து, அதன் பின் சில நாட்களில் குற்றவாளி பிடிக்கப்பட்டது உண்மையில் காவல்துறையில் ஒரு புதிய மைல்கல் என்று கூறப்பட்டு வருகிறது.
AI இன் எதிர்காலப் பங்கு
எனவே, விபத்து ஏற்படுத்திவிட்டோ அல்லது குற்றம் செய்துவிட்டோ இனி யாரும் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. ஒரு சின்ன தடயம் கிடைத்தால் கூட, அதை சாட்ஜிபிடி மூலம் விளக்கங்களை பெற்று, குற்றவாளியை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
